மதுரை : பஞ்சாப் மாநிலம் குருநானக் தேவ் பல்கலையில் இந்திய பல்கலைகளுக்கு இடையேயான டேக்வாண்டோ மகளிர் விளையாட்டுப் போட்டி நடந்தது.
இதில் மதுரை காமராஜ் பல்கலை சார்பில் பங்கேற்ற திண்டுக்கல் ஜி.டி.என்., கல்லுாரி மாணவி அனுசுயா பிரியதர்ஷினி 62 கிலோ எடைப் பிரிவில் தங்கம் வென்றார். இதையடுத்து இவர் உலக பல்கலைகளுக்கு இடையேயான போட்டிகளில் விளையாட தேர்வாகியுள்ளார்.
சென்னை தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலையில் நடந்த தெற்கு மற்றும் மேற்கு மண்டல பல்கலைகளுக்கு இடையேயான தடகளப் போட்டியில் மதுரை காமராஜ் பல்கலை சார்பில் 4 x 100 மீ., போட்டியில் மதுரை அமெரிக்கன் கல்லுாரி மாணவர்கள் மதன்குமார், சரண் சந்தர், சையத் அன்வர், எஸ்.ஆர். சாம் 41.33 நொடிகளில் கடந்து வெள்ளி வென்றனர். மேலும் 20 தடகள வீரர்கள் மதுரை பல்கலை சார்பில் தேசிய தடகளப் போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர்.
ஜம்மு பல்கலையில் நடந்த தேசிய பல்கலைகளுக்கு இடையேயான ஆண்கள் வாள்வீச்சு போட்டியில் மதுரை காமராஜ் பல்கலை ஜி.டி.என்., கல்லுாரி வீரர்கள் மெய்யப்பன், கிளாட்வின், மதுரை தியாகராஜர் கல்லுாரி மாணவர்கள் விஜயகுமார், சதாசிவ கணேஷ் பங்கேற்றனர். இவர்கள் குஜராத்தில் நடக்க உள்ள கேலோ இந்தியா பல்கலை போட்டிகளுக்கு தேர்வாகியுள்ளனர்.
இம்மாணவர்களை மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் குமார், பதிவாளர் சதாசிவம், டீன் கண்ணதாசன் உடற்கல்வி இயக்குனர் மகேந்திரன், உடற்கல்வி துறை தலைவர் ரமேஷ் , கல்லூரி உடற்கல்வி இயக்குனர்கள் ரவீந்திரன் ராஜசேகர், செல்வக்குமார், பாண்டியராஜன் பாராட்டினர்.