குள்ளஞ்சாவடி : கணவரை விஷம் கொடுத்து கொல்ல முயன்ற மனைவியும், அவரது கள்ளக் காதலனும் கைது செய்யப்பட்டனர்.
கடலுார் மாவட்டம், பண்ருட்டி அடுத்த சிறுவத்தூர், 7வது தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம் மகன் வெங்கடேசன், 40; லாரி டிரைவர். இவரது மனைவி சங்கீதா, 34. தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உள்ளனர்.
கடந்த 26ம் தேதி, குள்ளஞ்சாவடி அடுத்த தோப்புக்கொல்லை பகுதியில் உள்ள சங்கீதாவின் பெற்றோர் வீட்டிற்கு வெங்கடேசன் சென்றார்.
அங்கு வீட்டில் இருந்த மதுவை வெங்கடேசன் குடித்த பின், திடீரென மயங்கி விழுந்தார். அவரை கடலுார் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
பின், மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருகிறார்.
வெங்கடேசன் மது அருந்திய பின் திடீரென மயங்கி விழுந்ததால், அவரது உறவினர்கள் சந்தேகம் அடைந்து, சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தனர்.
சங்கீதாவிடம் போலீசார் விசாரித்ததில், அவர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததால் சந்தேகம் ஏற்பட்டது.
தொடர்ந்து நடந்த தீவிர விசாரணையில், சங்கீதாவுக்கு, சண்முகம், ௪௫, என்பவருடன் தகாத உறவு இருந்தது தெரிய வந்தது.
கள்ளக் காதலன் சண்முகத்தின் உதவியுடன் மது பாட்டிலில் பூச்சி மருந்தை கலந்து, வெங்கடேசனை கொலை செய்ய சங்கீதா திட்டமிட்டது தெரிந்தது.
இதையடுத்து, சங்கீதா, சண்முகம் ஆகிய இருவர் மீதும் கொலை முயற்சி வழக்கு பதிந்த போலீசார், இருவரையும் கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.