பெண்ணாடம், : பெண்ணாடம் அருகே, மேல்நிலை குடிநீர் தொட்டியில் அழுகிய நிலையில் வாலிபர் உடல் கிடந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடலுார் மாவட்டம், பெண்ணாடம் அடுத்த ராஜேந்திரப்பட்டிணம் காலனி பகுதியில் உள்ள மேல்நிலை குடிநீர்த் தொட்டி மூலமாக, நேற்று மாலை 6:00 மணியளவில், அப்பகுதி மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. அப்போது, அப்பகுதி மக்கள் சிலர், குடிநீரில் துர்நாற்றம் வீசுவதாக, ஊராட்சி தலைவர் சுரேஷ் மற்றும் டேங்க் ஆப்பரேட்டர் பிரகாஷிடம் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த ஊராட்சி தலைவர் மற்றும் பணியாளர்கள், மேல்நிலை தொட்டியில் ஏறி பார்த்தனர். தொட்டியில், உடல் மற்றும் முகம் சிதைந்த நிலையில் ஆண் சடலம் மிதந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
விருத்தாசலம் டி.எஸ்.பி., ஆரோக்கியராஜ், இன்ஸ்பெக்டர் முருகேசன், கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் தலைமையிலான சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டனர்.
பொது மக்கள் உதவியுடன், இரவு 8:30 மணியளவில், சடலத்தை மீட்டு, விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விசாரணையில், இறந்த வாலிபர், காணாமல் போன, அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி தலைவர் சிவசங்கரனின் மகன் சரவணகுமார், 34, என்பதும், சிவில் இன்ஜினியரிங் படித்து முடித்துவிட்டு வீட்டில் இருந்ததும், கடந்த 24ம் தேதி வீட்டைவிட்டு வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை என, இவரது பெற்றோர் நேற்று மதியம் கருவேப்பிலங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தது தெரிய வந்தது.
சரவணகுமார் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டியில் ஏறி தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்து குடிநீர் தொட்டிக்குள் வீசினார்களா என போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் குடிக்க பயன்படுத்தும் குடிநீர் தொட்டியில் உடல் கிடந்தது பெரும் பதற்றத்தையும், அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இதனால், விருத்தாசலம் சுகாதார துறை சார்பில், அப்பகுதி மக்களை பரிசோதனை செய்து, ஆலோசனை வழங்கினர்.தொடர்ந்து, இன்றும் மருத்துவ முகாம் நடத்தப்படும் என சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், குடிநீர் தொட்டியில் உள்ள தண்ணீரை வெளியேற்றி சுத்தம் செய்யும் பணியில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.