பாகூர் ; பாகூரில் உள்ள மீன் விதை பண்ணையில், உள்நாட்டு மீன் வளர்ப்போருக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
மீன் வளத்துறையின் கீழ் இயங்கி வரும், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை சார்பில் உள்நாட்டு மீன் வளர்ப்பை ஊக்குவித்திட பல்வேறு பயிற்சிகள் மற்றும் மானிய உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நேற்று பாகூரில் உள்ள மீன் விதை பண்ணையில், உள்நாட்டு மீன் வளர்ப்பில் உள்ள பிரச்னைகள் மற்றும் தீர்வுகள் என்ற தலைப்பில் ஒரு நாள் பயிற்சி முகாம் நடந்தது.
முகாமில், மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமை முதன்மை செயலாக்க அதிகாரி கோவிந்தசாமி வரவேற்று, மீன்கள் வளர்ப்பு தொடர்பாக மத்திய, மாநில அரசுகளின் திட்டங்கள் குறித்து விளக்கினார்.
விழுப்புரம் அரசு கல்லூரி உதவி பேராசிரியர் அருளரசன், உள்நாட்டு மீன் வளர்பில் உள்ள பிரச்னைகளும் அதற்கான தீர்வுகள் குறித்து விளக்கினார்.
முகாமில், பாகூர், குருவிநத்தம், பரிக்கல்பட்டு, மணப்பட்டு பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட மீன் வளர்ப்போர் பங்கேற்று, மீன் வளர்ப்பில் உள்ள சந்தேகங்களுக்கு விளக்கம் பெற்றனர்.