காஞ்சிபுரம்: மாகரல் கிராமத்தில் செயல்படும் 'கிரஷர்'களால், விவசாய நிலம் முழுதும் 'எம்.சாண்ட்' கழிவுகளாக கிடக்கின்றன. விதிமீறலின் உச்சமாக, ஏரியின் கரையிலேயே சாலை அமைத்து, கனரக வாகனங்களை இயக்கி வருவதை அதிகாரிகள் வேடிக்கை பார்த்து வருகின்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில், கடந்த 2013ம் ஆண்டுக்கு முன்பு, முறைகேடான மணல் குவாரிகளால் பாலாறு, செய்யாறு, கிளியாறு போன்ற ஆறுகள் நாசமாகின.
கனிம வளங்கள் சுரண்டப்பட்டு ஆற்றில் பல அடி ஆழம் ஏற்பட்டது. அரசியல்வாதிகளும், அதிகாரிகள் என பல தரப்பினரும் முறைகேடாக சம்பாதித்தனர்.
இந்த விவகாரத்தில், அப்போதைய கலெக்டர் சித்தரசேனன் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து மணல் எடுக்க விதிக்கப்பட்ட தடை, காஞ்சிபுரம் மாவட்டத்தில் இன்று வரை தொடர்கிறது. ஆனால், கல்குவாரிகள், கிரஷர்கள் செய்யும் விதிமீறல்களுக்கு இன்று வரை தீர்வே கிடைக்கவில்லை.
கிராம மக்கள் குமுறல்
எம்.சாண்ட் தேவைக்காக, கடந்த சில ஆண்டுகளில் கிரஷர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து விட்டது. காஞ்சிபுரம் மாவட்டத்திலும், கிரஷர் தொழில் செய்பவர்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றனர்.
இந்த கிரஷர் தொழில் செய்பவர்கள், எந்தவித விதிமுறைகளையும் மதிக்காமல் இஷ்டம்போல் செயல்படுவதால், சுற்றியுள்ள கிராம மக்கள், கால்நடைகள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர்.
காஞ்சிபுரம் அடுத்த மாகரல் கிராமத்தில், இயங்கும் கிரஷர்களால், அங்குள்ள விவசாய நிலங்கள் முழுதும் மாசடைந்து, விவசாயமே செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது.
மாகரல் கிராமத்தில் இயங்கும் கல்குவாரி, கிரஷர்கள் குறித்து, கிராமத்தினர் பல முறை மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அலுவலகம், கலெக்டர் அலுவலகம், பொதுப்பணித் துறை உள்ளிட்டோருக்கு புகார் மனு அளித்தும், இன்று வரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இந்த கிரஷர்கள் அரசியல் பின்புலத்தில் இயங்குவதால், அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க மறுக்கின்றனர்.
கிரஷர்களால், மாகரல் ஏரி அருகே உள்ள இருளர் குடும்பத்தினர் வசிக்கவே முடியாத நிலையில் சிரமப்படுகினற்னர். இருளர் இன மக்களின் வீடுகளின் மேற்கூரைகளில் கிரஷர் துகள் பட்டு, வீட்டின் கூரையே துாசி படர்ந்து காணப்படுகிறது.
உணவு, குடிநீர் என அனைத்திலும் இந்த கிரஷர் துகள் விழுந்து, அப்பகுதி மக்களுக்கு வாழவே முடியாத நிலையை ஏற்படுத்தி உள்ளது. மாசடைந்த நீர்நிலைகளில், ஆடு, மாடு போன்ற கால்நடைகள் தண்ணீர் குடிப்பதில்லை.
கிரஷர் உரிமையாளர்களின் உச்சபட்ச விதிமீறலாக, மாகரல் ஏரியின் கரையின் மீதே சாலை அமைத்து, அதன்மீதே கனரக வாகனங்களை ஓட்டி வருகின்றனர்.
ஏரியின் கரை மீது லாரியை இயக்கும் கிரஷர் உரிமையாளர்கள் மீது நீர்வளத் துறை நடவடிக்கை எடுக்காமல் வேடிக்கை பார்ப்பதாகவே கிராம மக்கள் குமுறுகின்றனர்.
விவசாயிகள் வேதனை
ஏரிக்கரையில் தொடர்ந்து கனரக லாரிகள் இயக்கப்பட்டால், கூடிய விரைவில் கரை உடைந்து ஏரியில் இருக்கும் தண்ணீர் வெளியேறும் சூழல் உருவாகும்.
அதேபோல், மாகரல் கிராமத்தில் 300க்கும் மேற்பட்ட ஏக்கர் விவசாய நிலங்களில் விழும் கிரஷர் துகள்களால், விளைச்சல் பாதிக்கப்பட்டு, விளை நிலமே நாசமாகி வருகிறது.
பயிரிடப்பட்ட நெற்பயிருக்கு இடையே விழுந்த கிரஷர் துகளால், கால் வைக்க கூட முடியவில்லை என விவசாயிகள் குமுறுகின்றனர். அதேபோல், வரத்து கால்வாய், போக்கு கால்வாய் என விவசாயத்துக்கு தேவையான அனைத்து கால்வாயிலும் எம்.சாண்ட் கழிவுகள் கொட்டி கிடக்கின்றன.
கிரஷர்களுக்கு அனுமதியளித்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், அனைத்து விதிமீறல்களையும் வேடிக்கை பார்த்து வருவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
அரசியல்வாதிகளின் முழு ஆதரவுடன் இந்த கிரஷர்கள் செயல்படுவதால், மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், நீர்வளத் துறை, வருவாய்த் துறை, கலெக்டர் என அனைத்து தரப்பினரும் கண்டும் காணாமல் உள்ளனர்.
ஒரு கி.மீ., துாரத்திற்குள் ஒரு கிரஷர்க்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என, கடந்த 2019 ம் ஆண்டு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்திருந்தது.
ஆனால், இங்கு பல கிரஷர்கள் அருகருகே இயங்குவதை கிராம மக்கள் சுட்டி காட்டுகின்றனர். மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், நீர்வளத் துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்திருந்தால் கிரஷர் உரிமையாளர்கள் விதிமுறைகளை பின்பற்றியிருப்பார்கள்.
ஆனால், அதிகாரிகளே அலட்சியமாக இருப்பதால், அனைத்து விதிமீறல்களும் சர்வ சாதாரணமாக நடைபெறுவதாக குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, நீர்வளத் துறை அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, 'மாகரல் ஏரிக்கரை மீது லாரி இயக்கும் கிரஷர் உரிமையாளருக்கு நோட்டீஸ் வழங்கியிருக்கிறோம். அவர்கள் அளித்த பதில் திருப்தியாக இல்லை.
'எனவே, அவர்களுக்கு அனுமதியளித்த தடையின்மை சான்றை ரத்து செய்ய பரிந்துரை செய்ய இருக்கிறோம். விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் கொடுத்த புகாருக்கும் இந்த பதிலை தெரிவித்து உள்ளோம்' என்றார்.