சென்னை: நாட்டின் சுதந்திர போராட்டத்தில், தமிழகத்தில் இருந்து பங்களிப்பு செய்து, இதுவரையில் வெளியில் வராத 408 வீரர்களின் வரலாற்று தகவல்கள், மத்திய அரசின் கலாசார அமைச்சகத்திடம், சி.பி.ராமசுவாமி அய்யர் அறக்கட்டளை சமர்ப்பித்துள்ளது.
இது குறித்து, சி.பி.ராமசுவாமி அய்யர் அறக்கட்டளை தலைவர் டாக்டர் நந்திதா கிருஷ்ணா வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழக கவர்னர் மாளிகையில் கடந்த, 23ம் தேதி நடந்த, நேதாஜி சுபாஷ் சந்திரபோசின், 126வது பிறந்த நாள் விழா நடந்தது. அதில், ஒவ்வொரு பல்கலையிலும் குறைந்தது ஐந்து மாணவர்களாவது, சுதந்திர போராட்ட வீரர்களை பற்றி ஆய்வு செய்து, அறிக்கை சமர்ப்பிக்க, தமிழக கவர்னர் ரவி உத்தரவிட்டார்.
நாட்டின் 75வது சுதந்திர தினத்தையொட்டி, சுதந்திர தின அமுதப் பெருவிழா என்ற பெயரில், பல்வேறு செயல்பாடுகளை மத்திய அரசு முன்னெடுத்து வருகிறது. இதில், சி.பி.ராமசுவாமி அய்யர் அறக்கட்டளையும் ஒரு பகுதியாக இணைந்து பணியாற்றி வருகிறது.
இதற்கிடையே, தமிழகத்தில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று, இதுவரையில் வெளிவராத, 203 வீரர்களின் வரலாற்றை கண்டறிந்து, மத்திய அரசின் கலாசார அமைச்சகத்திடம் சமர்ப்பித்தோம். அதன்பின், அமைச்சகத்தின் வேண்டுகோளை அடுத்து, தமிழகத்தில் இருந்து மேலும், 205 பேரின் வரலாற்றை கண்டறிந்து அனுப்பி உள்ளோம்.
முதற்கட்டமாக சமர்பித்த, 203 வீரர்கள் பற்றிய விபரத்தை, cmsadmin.amritmahotsav.nic.in/unusingheroes.htm. என்ற தளத்தில், மத்திய அமைச்சகம் பதிவேற்றம் செய்துள்ளது.
இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.