திருப்பூர் : தைப்பூச தேர்த்திருவிழாவை முன்னிட்டு கோவை, திருப்பூரில் இருந்து, 80 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
முக்கிய நிகழ்வான தேரோட்டம் பிப்., 5ம் தேதி நடக்கிறது.
இதற்காக, பழநி செல்லும் பக்தர் வசதிக்காக, அரசு போக்குவரத்து கழகம் சார்பில் மதுரை, திண்டுக்கல், தேனி, கரூர் ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து, 300க்கு மேற்பட்ட சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகின்றன.
வரும், 4ம் தேதி அதிகாலை முதல், 5ம் தேதி இரவு வரை இந்த சிறப்பு பஸ்கள் இயங்கும். அரசு போக்குவரத்து கழக கோவை கோட்டத்தை பொறுத்தவரை, கோவையில் இருந்து பொள்ளாச்சி, உடுமலை வழியாக, 30 பஸ்கள், திருப்பூரில் இருந்து, 50 பஸ்கள் என, மொத்தம், 80 பஸ்கள் இயக்கப்படுகின்றன. ஈரோடு, நீலகிரி மாவட்டத்தில் இருந்து பயணிகள் கூட்ட நெரிசல் மற்றும் தேவைக்கேற்ப பஸ் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.
போக்குவரத்து துறை அதிகாரிகள் கூறுகையில்,'கடந்த இரு ஆண்டுகளில் கொரோனா காரணமாக பக்தர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டதால் கூட்டம் இல்லை. நடப்பாண்டு கொரோனா இல்லை. இதனால், தைப்பூச நாளில் பழநியில் கூட்டம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பழநியை சுற்றியுள்ள மாவட்டங்களில் இருந்து தேவைக்கேற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும்' என்றனர்.