தென்மேற்கு பருவ மழை துவங்கி, அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையால், கடந்தாண்டு, ஜூலை, 15ம் தேதி, அணை நிரம்பியது.
தொடர்ந்து, பருவ மழைகள் தீவிரமடைந்ததால்,கடந்தாண்டு பெரும்பாலான நாட்கள், அணை நீர்மட்டம் ததும்பிய நிலையிலேயே காணப்பட்டது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனம், கல்லாபுரம், ராமகுளம், கொமரலிங்கம், கண்ணாடிப்புத்துார், சோழமாதேவி, கணியூர், கடத்துார், காரத்தொழுவு ஆகிய எட்டு ராஜவாய்க்கால் பாசனத்திலுள்ள, 7,520 ஏக்கர் நிலங்களுக்கு, குறுவை நெல் சாகுபடிக்கு, கடந்தாண்டு, மே 16ல் தண்ணீர் திறக்கப்பட்டு, செப்., வரை நீர் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, இரண்டாம் பருவ சாகுபடிக்கு நீர் திறக்கப்பட்டு, வரும் பிப்., 28 வரை வழங்கப்பட உள்ளது.
அமராவதி பழைய ஆயக்கட்டு பாசனத்தில், திருப்பூர், கரூர் மாவட்டங்களில், தாராபுரம், கரூர், அரவக்குறிச்சி தாலுகாவில், அலங்கியம் முதல் கரூர் வரை, வலது கரையிலுள்ள, 10 பழைய வாய்க்கால் பாசனத்துக்கு உட்பட்ட, 21 ஆயிரத்து, 867 ஏக்கர் நிலங்களுக்கு கடந்த, செப்., ல் நீர் திறக்கப்பட்டது.
135 நாட்களில், 70 நாள் திறப்பு, 65 நாட்கள் அடைப்பு என்ற அடிப்படையில், 5,443 கனஅடி நீர் வழங்கப்பட்டு, வரும், 7ம் தேதி நிறைவு செய்யப்பட உள்ளது. அதே போல், புதிய ஆயக்கட்டு பாசனத்தில், உடுமலை, மடத்துக்குளம், தாராபுரம் தாலுகாவிலுள்ள, 25 ஆயிரத்து, 250 ஏக்கர் நிலங்களுக்கும், 2,661 மில்லியன் கனஅடி நீர் வழங்கப்பட்டு, வரும், 7ம் தேதி நிறைவு செய்யப்பட உள்ளது.
இந்நிலையில், பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள, நெல், கரும்பு மற்றும் நிலைப்பயிர்களாக தென்னை உள்ளிட்டவை பயன்பெறும் வகையிலும்,
தற்போது நிலையிலுள்ள நெல் மற்றும் கரும்பு அறுவடை செய்யும் வரை, பாசன காலம் நீடிக்கவும், கூடுதல் நீர் வழங்க வேண்டும், என பழைய மற்றும் புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தற்போது, அமராவதி அணையிலும் திருப்தியான நீர் இருப்பு உள்ளதால், பாசன காலத்தை நீடிக்கவும், வரும், 28 வரை, சுற்றுக்கள் அடிப்படையில் நீர் வழங்கவும், விவசாயிகள் கோரிக்கை அடிப்படையில், பொதுப்பணித்துறை அதிகாரிகள் அரசுக்கு பரிந்துரை செய்துள்ளனர்.
அதிகாரிகள் கூறியதாவது:
அமராவதி பழைய ஆயக்கட்டு, அலங்கியம் முதல் கரூர் வரை உள்ள, 10 வலது கரை கால்வாய் பாசன நிலங்களில், நெல், கரும்பு ஆகிய நிலைப்பயிர்களுக்கு, அறுவடைக்கு தயாராகும் வரை, கூடுதல் நாட்கள் நீர் வழங்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
அதே போல், புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகளும், நெல், கரும்பு பயிருக்கு கூடுதல் நாட்கள் நீர் வழங்க கோரிக்கை விடுத்துள்ளனர்.
இந்நிலங்களின் பாசன காலம், வரும் 7ம் தேதி நிறைவு பெற உள்ள நிலையில், அணையிலும் திருப்தியான நீர்இருப்பு உள்ளதால், பிப்., 28 வரை, அணை நீர் இருப்பை பொருத்து, பாசன காலம் நீடித்து, கூடுதல் நீர் வழங்க அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
அரசு அனுமதி கிடைத்ததும், கூடுதல் நீர் வழங்கப்படும். இவ்வாறு, அதிகாரிகள் தெரிவித்தனர்.
அமராவதி அணையில் மொத்தமுள்ள, 90 அடியில், நேற்று காலை நிலவரப்படி, 73.76 அடி நீர்மட்டம் இருந்தது. மொத்த கொள்ளளவான, 4,047 மில்லியன் கனஅடியில், 2,678.19 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது. அணைக்கு வினாடிக்கு, 85 கனஅடி நீர்வரத்து இருந்தது. அணையிலிருந்து, 890 கன அடி நீர் வெளியேற்றப்பட்டது.