சேலம்: சேலம், முள்ளுவாடி கேட் பகுதியில் உள்ள அன்பு இல்லத்தில், தொன்போஸ்கோ பெருவிழா நடந்தது. இல்ல இயக்குனர் கஸ்மீர் ராஜ் வரவேற்றார். அதில் சேலம் மறைமாவட்ட ஆயர் அருள்செல்வம் ராயப்பன் பேசியதாவது:
எளிய குடும்பத்தில் பிறந்த தொன்போஸ்கோ, 2 வயதில் தந்தையை இழந்தார். 12 வயதுக்குள் பல்வேறு வேலைகளை செய்திருந்தார். இறைவன் அருளால், 26 வயதில் குருவானார். நம் சாதாரண தொடக்க வாழ்வை மறக்கக்கூடாது என்பதை அவரிடமிருந்து கற்க வேண்டும். துன்பம், வேதனை, பசியோடு துாங்குவது ஆகியவற்றை உணர்ந்ததால், ஓரங்கட்டப்பட்ட, ஒடுக்கப்பட்டவர்களை தேடி சென்றார். நாம் மகிழ்வோடு இருப்பதோடு, நம்மை சந்தித்தவர்களும், மகிழ்வோடு திரும்ப வேண்டும். திறமையில்லாமல் கூட இருக்கலாம்: இருப்பினும் அன்புடன், பாசத்துடன், கனிவுடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
இவ்வாறு அவர் பேசினார்.
இதில் குழந்தை திருமணம், போதை பொருட்களிலிருந்து குழந்தைகளை காப்பது குறித்த குறும்படங்கள் வெளியிடப்பட்டன. அன்பு இல்ல குழந்தைகளின் கலைநிகழ்ச்சி நடந்தது. மறைமாவட்ட முதன்மை குரு மைக்கேல் ராயப்பன், எஸ்.எம்.எம்.ஐ., மாநில தலைவர் புளோரா வளன், தொன் போஸ்கோ உதவி இயக்குனர் பால்ராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.