எருமப்பட்டி: பொங்கல் பண்டிகையை ஒட்டி, எருமப்பட்டி பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி கோரி, நாமக்கல் மாவட்ட கலெக்டரிடம் மனு கொடுத்து பல நாட்கள் ஆகியும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்குவது குறித்து எந்த முடிவும் எடுக்காமல் அலட்சியமாக உள்ளதால், இந்த ஆண்டு, ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
நாமக்கல் மாவட்டம், எருமப்பட்டி, அதை சுற்றியுள்ள பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம், பண்ணைக்காரம்பட்டி, தேவராயபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை சமயத்தில், ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வந்தது.
அதன்படி இந்த ஆண்டும் எருமப்பட்டி, பொட்டிரெட்டிபட்டி, அலங்காநத்தம் உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த விழா குழு சார்பில், கலெக்டரிடம் அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. ஆனால், இந்த மனுக்கள் குறித்து மாவட்ட நிர்வாகம் எந்த முடிவும் எடுக்காததால், இப்பகுதியில் நடக்க இருந்த ஜல்லிக்கட்டு போட்டி நடக்குமா என சந்தேகம் எழுந்துள்ளது.
இது குறித்து எருமப்பட்டியை சேர்ந்த ஜல்லிக்கட்டு ஆர்வலர் ஒருவர் கூறியதாவது:
எருமப்பட்டி பகுதியில் ஆண்டுதோறும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வந்தது. இதேபோல் இந்தாண்டும் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கோரி மனு அளிக்கப்பட்டது. அதை பெற்றுக்கொண்ட, வருவாய் துறையினர், இதுவரை அனுமதி வழங்காமல் இழுத்தடித்து வருகின்றனர். இதனால் ஜல்லிக்கட்டு ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ேளாம்.
இவ்வாறு அவர் கூறினார்.