பள்ளிபாளையம்: ''பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் மோட்டார் வைத்து குடிநீர் எடுப்பதை தடுக்க, கண்காணிப்பு குழு அமைக்கப்படும்,'' என, நகராட்சி தலைவர் செல்வராஜ் தெரிவித்தார்.
பள்ளிபாளையம் நகராட்சி பகுதியில் உள்ள அனைத்து வார்டுகளிலும் பொதுமக்களுக்கு ஆற்று தண்ணீர், குடிநீராக வழங்கப்பட்டு வருகிறது. பெரும்பாலான இடங்களில் வீட்டு குடிநீர் இணைப்பில் மோட்டார் வைத்து குடிநீர் திருடப்பட்டு வருகிறது. விரைவில் கோடைகாலம் துவங்கவுள்ளதால், இந்த காலகட்டத்தில் தண்ணீர் தேவையும் அதிகரித்து காணப்படும். இந்நிலையில் மோட்டார் வைத்து தண்ணீர் எடுத்தால், கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை அதிகளவு ஏற்படும். இதை தடுக்க மோட்டார் வைத்து தண்ணீர் எடுப்பவர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
பள்ளிபாளையம் நகராட்சி தலைவர் செல்வராஜ் கூறியதாவது: நகராட்சி பகுதியில் வீட்டு குடிநீர் இணைப்பில் மோட்டார் வைத்து குடிநீர் திருடினால் நடவடிக்கை எடுக்கப்படும். இதை கண்காணிக்க அடுத்த வாரம் குழு அமைக்கப்படும். கோடைகாலத்தில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.