வெண்ணந்துார்: வெண்ணந்துார் ஒன்றியம் மூலக்காடு பகுதியில், சேலம் - நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய ஊராட்சியாகும். மூலக்காடு பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை, மக்கும் குப்பை மக்காத குப்பை என, தரம் பிரிக்காமல், அதே பகுதியில் பல்வேறு, சேலம்- நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில், முக்கிய சாலையோரங்களில் கொட்டி காலை, மாலை நேரத்தில் தீ வைத்து எரித்து வருகின்றனர்.
இதேபோல நேற்று காலை சேலம் நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் முக்கிய சாலை ஓரத்தில் குப்பையை கொட்டி தீ வைத்ததால், பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ, மாணவியர் மற்றும் அலுவலகம் செல்லும் பணியாளர் என அனைவரும் பாதிப்புக்கு உள்ளாகினர்.
மேலும் பலரும் தொற்று நோய் பரவும் அச்சத்தில் உள்ளனர். அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். எனவே, மூலக்காடு பஞ்., பகுதியில் சேகரிக்கப்படும் குப்பையை பூங்காவிற்கு கொண்டு சென்று, மக்கும் குப்பை மக்காத குப்பை என, தரம் பிரித்து குப்பை மறுசுழற்சி செய்ய வேண்டும். சாலையோரங்களில் குப்பையை கொட்டி தீ வைக்கும் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதியினர் வேண்டு கோள் விடுத்துள்ளனர்.