சென்னை, ஐ.பி.எல்., கிரிக்கெட் போல, வாலிபால் விளையாட்டில், பி.வி.எல்., எனும் 'பிரைம் வாலிபால் லீக்' போட்டி உள்ளது. இதன் இரண்டாவது சீசனுக்கான போட்டி, கர்நாடகா மாநிலம் பெங்களூரு, கோரமங்கலா உள்விளையாட்டு அரங்கில், வரும் 4ல் துவங்குகிறது.
பெங்களூரு தோர்பிடோஸ், கோல்கட்டா தண்டர்போல்ட்ஸ், மும்பை மெட்டியோர்ஸ், கோழிக்கோடு ஹீரோஸ், ஆமதாபாத் டிபன்டர்ஸ், ஹைதராபாத் பிளாக்ஹாவ்ஸ், கொச்சி புளூ ஸ்பைக்கர்ஸ், சென்னை பிளிட்ஸ் ஆகிய எட்டு அணிகள் பங்கேற்கின்றன.
பெங்களூரு, ஹைதராபாத், கொச்சி ஆகிய மூன்று இடங்களில் இப்போட்டி நடக்கிறது. மூன்று கட்டமாக நடந்து, மார்ச் 5ல், கொச்சியில் இறுதிக்கட்ட போட்டிகள் நடக்கின்றன.
தொடக்க 'லீக்' ஆட்டத்தில், நடப்பு சாம்பியன் கோல்கட்டா அணி, பெங்களூருவை எதிர்கொள்கிறது. சென்னை அணி, தன் அறிமுக, முதல் லீக் ஆட்டத்தை, 7ல் கொச்சியை சந்திக்கிறது. தினமும் போட்டிகள் இரவு 7:00 மணிக்கும், இரண்டாவது ஆட்டம் இரவு 9:30 மணிக்கும் நடக்கிறது.
போட்டியில், தமிழகம் சார்பில் பங்கேற்கும் சென்னை பிளிட்ஸ் அணிக்கான சீருடை அறிமுக விழா, நேற்று முன்தினம் மாலை சென்னையில் நடந்தது.
விழாவில், சென்னை அணியின் உரிமையாளர் விக்ராந்த் ரெட்டி, அணிக்கான சீருடையை அறிமுகப்படுத்தி, அணியின் கேப்டனாக தமிழகத்தைச் சேர்ந்த வீரர் நவீன் ராஜா ஜேக்கப்பை அறிவித்தார்.
சென்னை பிளிட்ஸ் அணியில், அகின், நவீன்ராஜா ஜேக்கப், பினம்மா பிரசாந்த், ஜோபின் வர்கீஸ், சீதாராம ராஜு, அஸ்வின், ராமநாதன், பிரசன்னா ராஜா, ராமன்குமார், முகமது ரியாசுதீன், ரெனாடோ மென்டிஸ் கெர்வாசியோ, மோயோ ஆட்ரின், அப்துல்முகினி கிறிஸ்டி ஆகியோர் இடம்பெற்று உள்ளனர்.