சென்னை மாநகராட்சியில் பொது இடங்களில் குப்பை கொட்டியோர் மற்றும் போஸ்டர் ஒட்டியோரிடம் 2022ம் ஆண்டில் 5.95 கோடி ரூபாயை மாநகராட்சி அபராத தொகையாக வசூலித்துள்ளது. தொடர்ந்து, விதிமீறலில் ஈடுபடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், மாநகராட்சி எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சிக்கு சொத்து வரி, தொழில் வரி, தொழில் உரிமம் வரி, பதிவு கட்டணம் உள்ளிட்ட பல்வேறு வகைகளில், ஆண்டுக்கு 2,500 கோடி ரூபாய்க்கு மேல் வருவாய் கிடக்கிறது.
இந்த வருவாய் வாயிலாக, சென்னை மாநக ராட்சிக்கு தேவையான அடிப்படை கட்டமைப்புகள், திடக்கழிவுகள் அகற்றுதல், தெரு விளக்குகள், பூங்காக்கள், சாலை பராமரித்தல், பொது சுகாதாரம், நோய் தடுப்பு ஆகிய அத்தியாவசிய பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
மேலும், மத்திய, மாநில அரசுகள் நிதி மற்றும் பன்னாட்டு வங்கிகளின் நிதி ஆதாரங்களின் அடிப்படையிலும், மாநகரின் கட்டமைப்புகள் சர்வதேச தரத்துக்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன.
அதற்காக, சென்னை மாநகராட்சி எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில், சுவர்களில் அரசியல் விளம்பரங்கள் செய்தல், போஸ்டர் ஒட்டுதல் தடை விதிக்கப்பட்டது.
அவ்வாறு சுவர்களில் எழுதப்பட்ட 150க்கும் மேற்பட்ட இடங்களில், அவை அழிக்கப்பட்டு, மாநகரின் வரலாற்றை குறிக்கும் வகையிலான வண்ண ஓவியங்கள் வரைப்பட்டன.
அதேபோல், பொது இடங்களில் குப்பை, கட்டட கழிவுகள் கொட்டுவோரை கண்டறிந்து மாநகராட்சி தலா 500 ரூபாய் அபராதம் விதித்து வருகிறது. மேலும், தடை செய்யப்பட்ட 14 வகையான பிளாஸ்டிக் பயன்படுத்துவோரிடமும் அபராதம் விதித்து, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன்படி, 2022ம் ஆண்டில் குப்பை கொட்டியோர், பிளாஸ்டிக் பொருட்கள் விற்றோர், போஸ்டர் ஒட்டியோர் உள்ளிட்டோரிடம் 5.95 கோடி ரூபாயை அபராதமாக, மாநகராட்சி வசூலித்து உள்ளது.
இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் வகையில், பல்வேறு கட்டமைப்பு வசதிகளை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அதன்படி, திறந்தவெளிகளில் சிறுநீர், மலம் கழித்தலை தடுப்பதற்காக, ஏற்கனவே உள்ள 700க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் நவீனப்படுத்தப்பட்டுள்ளன. அத்துடன், 358 இடங்களில் புதிதாகவும் மாநகராட்சி கழிப்பறையை ஏற்படுத்தி உள்ளது.
அதேபோல், பொது இடங்களில் குப்பை கொட்டுவதை தடுக்க, அனைத்து கடைகளின் வாசல்களில், மட்கும், மட்காத என, இரண்டு விதமான குப்பை தொட்டிகளை வைக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. அவற்றை மீறி, குப்பை தொட்டி இல்லாத கடைகளுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது.
மேலும், கட்டட கழிவுகளை கொட்டுவதற்காக, மண்டல வாரியாக இடங்கள் தேர்வு செய்யப்பட்டு, அங்கு கொட்ட அனுமதி அளிக்கப்படுகிறது.
குடியிருப்பு வளாகம், வணிக வளாகத்தில், தினசரி 100 கிலோவுக்கு மேல் குப்பை உற்பத்தி செய்யப்பட்டால், அவர்களே உர தயாரிப்பு மையம், மறுசுழற்சி மையம் அமைத்து, குப்பையை கையாள வேண்டும். மீறுவோர் மீதும் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.
இதுபோல், மாநகராட்சி பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி தந்தாலும், பொதுமக்கள், வணிகர்கள் தொடர்ந்து விதிமீறல்களில் ஈடுபட்டு வருகின்றனர். அவற்றை தடுக்கும் வகையில், அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
அந்த வகையில், 2022ம் ஆண்டில் மட்டுமே, 5.95 கோடி ரூபாய் அபராத தொகை வாயிலாக மாநகராட்சிக்கு வருவாய் கிடைத்துள்ளது. வரும் ஆண்டிலும் விதிமீறலுக்கான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
சென்னையில் 40 சதவீதம் வீடுகளில் குப்பையை, மட்கும், மட்காத குப்பையாக துாய்மை பணியாளர்கள் பிரித்து வாங்குகின்றனர். அதேபோல், சேகரிக்கப்படும் குப்பையையும் மட்கும் குப்பையை பிரித்து, உரம் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தின் விற்பனை வாயிலாக, 25 லட்சத்து 24 ஆயிரத்து 140 ரூபாயை, மாநகராட்சி வருவாயாக ஈட்டியுள்ளது.
சென்னையில் 40 சதவீதம் வீடுகளில் குப்பையை, மட்கும், மட்காத குப்பையாக துாய்மை பணியாளர்கள் பிரித்து வாங்குகின்றனர். அதேபோல், சேகரிக்கப்படும் குப்பையையும் மட்கும் குப்பையை பிரித்து, உரம் தயாரிப்பு பணிகளில் ஈடுபடுகின்றனர். அந்த வகையில் தயாரிக்கப்பட்ட இயற்கை உரத்தின் விற்பனை வாயிலாக, 25 லட்சத்து 24 ஆயிரத்து 140 ரூபாயை, மாநகராட்சி வருவாயாக ஈட்டியுள்ளது.
- நமது நிருபர் -