சென்னை சென்னை பெருநகரில், ஒன்பது ஏரிகளின் கரையோர பகுதிகளில் சிறப்பு வசதிகள் ஏற்படுத்தும் திட்டங்களை, 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்த, தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை பெருநகரில் புதிய கட்டுமான திட்டங்கள் வருகையால் ஏரி, குளங்கள் போன்ற நீர் நிலைகள் கடுமையாக பாதிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
எனவே, புதிய குடியிருப்புகள் அதிகரிக்கும் இடங்களில் நீர் நிலைகளை பாதுகாப்பதற்கான சிறப்பு திட்டங்களை, சி.எம்.டி.ஏ., உருவாக்கியது.
இதன்படி, சென்னை பெருநகரில் பெரும்பாக்கம், அயனம்பாக்கம், வேளச்சேரி, ரெட்டேரி, முடிச்சூர், மாடம்பாக்கம், செம்பாக்கம், ஆதம்பாக்கம், புழல் ஆகிய ஒன்பது ஏரிகளை, சி.எம்.டி.ஏ., தேர்வு செய்தது.
இந்த ஏரிகளின் கரையோர பகுதிகளில் பொது மக்களுக்கான பூங்காக்கள், விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துவதற்கான திட்டம், 100 கோடி ரூபாய் மதிப்பில் உருவாக்கப்பட்டது.
இத்திட்டத்தை செயல்படுத்த, பொதுப்பணித் துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளின் ஒத்துழைப்பைப் பெற, சி.எம்.டி.ஏ., திட்டமிட்டுள்ளது.
இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக, சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது முதல்கட்டம் தான். அடுத்தடுத்து பிற ஏரிகளிலும் இதே போன்ற மேம்பாட்டு திட்டங்களை செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.