கோவை : கோவையில் உள்ள பறவைகள் மறு வாழ்வு மையத்தில், பராமரிக்கப்பட்டு வந்த 20 கிளிகள் பறக்கவிடப்பட்டன.
வட கோவை பகுதியில் உள்ள, கோவை மாவட்ட வன அலுவலகத்தில் பறவைகள் மறு வாழ்வு மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு, விபத்தில் சிக்கிய பறவைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மயில்கள், புறா, காகம், ஆந்தை, கழுகு, மைனா உள்ளிட்ட ஏராளமான பறவைகள் உள்ளன.
குறிப்பாக, கிளிகள் விற்பனை செய்தவர்கள், வீட்டில் வளர்த்தவர்கள் மற்றும் ஜோசியம் பார்க்க பயன்படுத்தியவர்களிடமிருந்து, மீட்கப்பட்ட சுமார் 200க்கும் மேற்பட்ட கிளிகள், பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பறக்க தயாரான 20 கிளிகளை, பறக்கவிடும் நிகழ்வு நேற்று நடந்தது.
இந்நிகழ்வில், மாநகராட்சி கமிஷனர் பிரதாப், மாவட்ட வன அலுவலர் அசோக்குமார், வனத்துறை மருத்துவர் சுகுமார், வனச்சரக அலுவலர் அருண் மற்றும் அனிமல் ரெஸ்க்யூ அமைப்பினர் பங்கேற்றனர்.