கோவை: உக்கடம் பெரிய குளத்தில், 'மிதக்கும் சோலார்' மின்னுற்பத்தி மையம் அமைக்க, சுவிட்சர்லாந்து துாதர் நேற்று ஆய்வு செய்தார்.
கோவை மாநகராட்சியில் மேற்கொள்ளப்படும் பல்வேறு சிறப்பு திட்டங்களுக்கு சுவிட்சர்லாந்து நிதியுதவி அளித்து வருகிறது.
இதில், காய்கறி கழிவில் காஸ் உற்பத்தி செய்து, மின்சாரமாக மாற்றி, தெருவிளக்குகளுக்கு பயன்படுத்தும் மையம் அமைக்க, 45 லட்சம் ரூபாயை சுவிட்சர்லாந்து வழங்கியது.
அடுத்த கட்டமாக, உக்கடம் பெரியகுளத்தில், ரூ.1.1 கோடியில், 'மிதக்கும் சோலார்' மின்னுற்பத்தி நிலையம் அமைக்கப்படுகிறது.
இதில், 50 சதவீத பங்களிப்பாக, 55 லட்சம் ரூபாயை சுவிட்சர்லாந்து வழங்குகிறது; மீதமுள்ள நிதியை, நமக்கு நாமே திட்டத்தில் பெற்று, திட்டத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வர, மாநகராட்சி முடிவு செய்திருக்கிறது.
உக்கடம் பெரிய குளத்தை, சுவிஸ் வளர்ச்சி நிறுவன உதவி இயக்குனர் துாதர் கிறிஸ்டியன் ப்ரூட்டிகர் மற்றும் குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர். 'மிதக்கும் சோலார்' திட்டம் தொடர்பாக, மாநகராட்சி கமிஷனர் பிரதாப் விளக்கினார்.
முன்னதாக, உக்கடம் புல்லுக்காடு பகுதியில் உள்ள, கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி மின்னுற்பத்தி மையங்கள், பாரதி பார்க் வளாகத்தில் உள்ள 'பயோ காஸ்' மையங்களை பார்வையிட்டனர்.
அப்போது, மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா, மத்திய மண்டல உதவி கமிஷனர் மகேஷ் கனகராஜ், மண்டல தலைவர் மீனா, வரி விதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவி முபஷீரா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.