திருவொற்றியூர், திருவொற்றியூர் நெடுஞ்சாலை, விம்கோ நகர் மெட்ரோ ரயில் நிறுத்தம் அருகே, முன்னாள் பிரதமர் இந்திரா, முன்னாள் முதல்வர் காமராஜர் ஆகியோரது மார்பளவு சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. அதே பகுதியில், எம்.ஆர்.எப்., டயர் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
அந்த நிறுவனத்தின் ஊழியர்களை அழைத்து செல்லும் பேருந்துகள், சிலைகளை ஒட்டியுள்ள திருவொற்றியூர் நெடுஞ்சாலையோரம் நிறுத்தி வைப்பதால், விபத்து அச்சம் நிலவி வருவது குறித்து, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது.
ஆனால், நிர்வாகம் மெத்தனமாக செயல்பட்டது. இந்நிலையில், நேற்று முன்தினம் அந்நிறுவன பேருந்து பின்பக்கமாக திரும்ப முயன்ற போது, நெடுஞ்சாலையோரம் இருந்த இந்திரா சிலை அமைந்துள்ள பீடத்தில் இடித்துள்ளது. இதில், சிலையின் பீடம் நொறுங்கி, பலத்த சேதமடைந்தது. ஆனால், சிலை உடைவதற்கு யார் காரணம் என்பது தெளிவாகாமல் இருந்தது.
இதனால், அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது. இது குறித்து, திருவொற்றியூர் மேற்கு பகுதி காங்கிரஸ் தலைவர் ஆறுமுகம், காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த திருவொற்றியூர் போலீசார், 'சிசிடிவி' கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்தனர். அதில், எம்.ஆர்.எப்., நிறுவனத்தின் பேருந்து இடித்து சிலை சேதமடைந்தது தெரியவந்தது.
அதன்படி, தொடர்புடைய எம்.ஆர்.எப்., தொழிற்சாலை வாகன ஓட்டுனரான, விம்கோ நகரைச் சேர்ந்த ஜான் கிரிஸ்டி, 40, என்பவரை கைது செய்து, விசாரணைக்கு பின், காவல்நிலைய பிணையில் விடுவித்தனர்.
எம்.ஆர்.எப்., தொழிற்சாலை பேருந்துகள் அத்துமீறி, நெடுஞ்சாலையோரம் நிறுத்துவதால், விபத்து அச்சம் தொடர்வதாக அப்பகுதியினர் குற்றம்சாட்டியுள்ளனர். இதன் அருகில் மெட்ரோ ரயில் நிறுத்தம், மார்க்கெட், பத்திரப்பதிவு அலுவலகம், பேருந்து நிலையம், அரசுப் பள்ளி இருப்பதால், மீண்டும் விபத்துகள் நேராத வகையில் நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துஉள்ளனர்.