கூடலுார்:முதுமலை தெப்பக்காடு அருகே, பழங்குடியின பெண்ணை கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், முதுமலை புலிகள் காப்பகம், தெப்பக்காடு யானைபாடியைச் சேர்ந்த பெண் மாரி, 65. பழங்குடி இனத்தைச் சேர்ந்த இவர், நேற்று முன்தினம் மாலை வனப்பகுதியில் விறகு சேகரிக்கச் சென்றார்; நீண்ட நேரம் ஆகியும் வரவில்லை.
நேற்று காலை, 7:00 மணிக்கு, அவரது உடல் வனப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டது. ஆய்வில், அவரை புலி தாக்கி கொன்றிருப்பது தெரிந்தது.
மசினகுடி போலீசார், சடலத்தை மீட்டு, ஊட்டி அரசு மருத்துவமனை எடுத்து சென்றனர். 'புலியை உடனே பிடிக்க வேண்டும்' என, வலியுறுத்தி, பழங்குடி மக்கள், மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதனால், தமிழகம் - கேரளா - கர்நாடகா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது; பயணியர் சிரமத்துக்கு ஆளாகினர்.
முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண், கூடலுார் ஆர்.டி.ஓ., முகமது குதுரத்துல்லா, டி.எஸ்.பி., செல்வராஜ் பேச்சு நடத்தி, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.
இறந்தவர் குடும்பத்துக்கு வனத்துறை சார்பில், 5 லட்சம் ரூபாய் நிவாரண தொகை வழங்கப்பட்டது. வன ஊழியர்கள், அப்பகுதியில் தானியங்கி கேமரா பொருத்தி, புலி நடமாட்டத்தை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டனர்.