கோவை:'மகளிருக்கான இலவச பஸ்சில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் நகை திருடுவது மிகவும் எளிது' என, கோவை போலீசாரிடம் பிடிபட்ட நபர், வாக்குமூலம் அளித்துள்ளார்.
கோவை உக்கடம் லட்சுமி நரசிம்மர் கோவில் அருகே சந்தேகத்துக்கு இடமான வகையில், நின்றிருந்த ஐந்து பேரை போலீசார் பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் மதுரையை சேர்ந்த பார்வதி, 67, அவரது மகன்கள் திவாகர்,36, கண்ணையா, 30, திவாகரின் மனைவியர் முத்தம்மா, 23, முத்துமாரி (எ) கீதா, 24, எனத் தெரிந்தது.
இவர்கள், பஸ்களில் கூட்ட நெரிசலை பயன்படுத்தி நகை திருடுவதை வழக்கமாக கொண்டவர்கள் என்பதும் தெரிந்தது.
போலீசார் அவர்களை கைது செய்து, சிறையில் அடைத்தனர். அவர்களிடமிருந்து, 40 சவரன் நகைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
போலீசார் விசாரணையில் திவாகர் கூறியதாவது:-
குடும்பத்துடன் சென்று தான் திருட்டில் ஈடுபடுவோம். முதலில் நான், தாய், தம்பி மட்டும் திருட்டில் ஈடுபட்டு வந்தோம்.
பக்கத்து வீட்டு முத்தம்மாவும், அவரது அக்காவுடன் சேர்ந்து திருட்டில் ஈடுபட்டது தெரிந்தது. இதையடுத்து அக்கா,- தங்கை இருவரையும் திருமணம் செய்து கொண்டேன்.
அவர்களுடன் இணைந்து தமிழகம் முழுதும் சென்று திருட்டில் ஈடுபட்டோம். கூட்டம் அதிகமாக உள்ள பஸ்களை குறி வைத்து திருட்டில் ஈடுபடுவோம்.
குறிப்பாக மகளிர் இலவச பஸ்களில் ஏறுவோம். அதில் தான் எப்போதும் கூட்டம் அதிகமாக இருக்கும். அதில் நகை திருடுவது மிகவும் எளிது.
இரு மனைவியரும், தாயும் பெண்களின் நகைகளை அறுத்து என்னிடம் கொடுப்பர். ஒரு மாதம் ஒரு ஊரில் இருந்து நகைகளை திருடி, அதில் கிடைக்கும் பணத்தை தாராளமாக செலவழிப்போம்.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.