கள்ளக்குறிச்சி-கள்ளக்குறிச்சி கலெக்டர் அலுவலகத்தில் அரசு கலை-அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான தொழில்நெறி வழிகாட்டும் கண்காட்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட அரசு வேலைவாய்ப்பு பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து, அரசு கலை, அறிவியல் கல்லுாரி மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு கருத்தரங்கம் மற்றும் கண்காட்சியை நடத்தினர்.
கருத்தரங்கை கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமை தாங்கி, துவக்கி வைத்து பேசினார். சேலம் மண்டல வேலைவாய்ப்பு இணை இயக்குனர் ஞானசேகரன் திட்ட விளக்கவுரையாற்றினார். கல்லுாரி முதல்வர் தமிழரசி வரவேற்றார்.
தொடர்ந்து டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் 'வாழ்க்கை வழிகாட்டல்' என்ற தலைப்பிலும், முன்னாள் படை வீரர் நலன் உதவி இயக்குநர் அருள்மொழி 'ராணுவத்தில் வேலை வாய்ப்புகள்' குறித்தும் பேசினர்.
மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குனர் சிவநடராஜன் திறன் பயிற்சிகள், நாகலுார் ஆர்.ஐ., வெங்கடேசன் போட்டி தேர்வுகள், மாவட்ட தொழில் மைய பொதுமேலாளர் சந்திரசேகரன் வங்கி கடன் உதவிகள் என்ற தலைப்புகளில் பேசினர்.
கண்காட்சியில் மத்திய தேர்வாணையம் நடத்தும் அனைத்து போட்டி தேர்வுகளுக்கான புத்தகங்கள் மற்றும் வேலைவாய்ப்பு குறித்த விபரங்கள் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தது. மாணவர்கள் ஆர்வமுடன் பார்வையிட்டனர்.
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் முரளிதரன் நன்றி கூறினார்.