கள்ளக்குறிச்சி-சின்னசேலம் பகுதியில் காட்டுத்தீ தடுப்பு முறைகள் குறித்து பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது.
விழுப்புரம் வனக்கோட்டம் சார்பில், சின்னசேலம் அடுத்த தெங்கியாநத்தம் ஊராட்சியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கு, கள்ளக்குறிச்சி வனச்சரக அலுவலர் கோவிந்தராஜூ தலைமை தாங்கினார்.
கச்சிராயபாளையம் பிரிவு வனவர் சின்னதுரை, வனக்காப்பாளர்கள் மணிகண்டன், செல்வராஜ், அட்சயசாமி முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் காட்டுத்தீயினால் ஏற்படும் பாதிப்புகள், காட்டுத்தீ பரவாமல் இருக்க பொதுமக்கள் மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள், தீ ஏற்பட்டால் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள், அதை கட்டுப்படுத்தும் வழிமுறைகள், வனத்துறை அலுவலர்களுக்கு தகவல் தெரிவித்தல் குறித்த துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து நாடகம், மயிலாட்டம், ஒயிலாட்டம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகள் மூலம் காட்டுத்தீ குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. ஸ்பேரோவ்ஸ் நெஸ்ட் அறக்கட்டளை மற்றும் எஸ்.என்.டி., கலைபயண குழுவினர் கலைநிகழ்ச்சிகளை நடத்தினர்.
அதேபோல், எலவடி மற்றும் பைத்தந்துறை அரசு பள்ளிகளிலும் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடந்தது. நிகழ்ச்சியில் தலைமை ஆசிரியர்கள், ஊராட்சி தலைவர்கள் உட்பட பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.