கள்ளக்குறிச்சி-மொபைலில் வரும் தேவையில்லாத இணைப்புகளை 'கிளிக்' செய்யாமல் விலகி இருக்க வேண்டுமென மாணவர்களுக்கு சைபர் கிரைம், இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு எச்சரித்தார்.
கள்ளக்குறிச்சி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் சைபர் கிரைம் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வுமுகாம் நடந்தது. தலைமையாசிரியர் (பொ) கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட கல்வி அலுவலர்ஆரோக்கியசாமி, சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு, சப் - இன்ஸ்பெக்டர் அப்புதுரை முன்னிலைவகித்தனர்.
நிகழ்ச்சியில் சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் சுரேஷ்பாபு பேசுகையில், 'மாணவர்கள் அனைவரும் பேஸ்புக்,வாட்ஸ் ஆப் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளத்திலும், இணையத்திலும் நுழைகின்றனர். அதில் வரும்தேவையில்லாத இணைப்புகளை 'ஓகே' செய்வதன் மூலம், மொபைலில் உள்ள தகவல்களை சைபர் கிரைம் குற்றவாளிகள்திருடுகின்றனர்.
மேலும், திருடிய தகவல்களை கொண்டு போலி சமூக வலைதள கணக்கினை உருவாக்கி பணம் பறித்தல்,போட்டோக்களை ஆபாசமாக சித்தரித்து பணம் கேட்டு மிரட்டுதல், பெற்றோர்களின் வங்கி கணக்கில் இருந்தும் பணத்தைதிருடுதல் உள்ளிட்ட குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.
எனவே, மொபைலில் வரும் தேவையில்லாத இணைப்புகளை'கிளிக்' செய்யாமல் மாணவர்கள் விலகி இருக்க வேண்டும்' என்றார்.
தொடர்ந்துகுழந்தைகளின் பாதுகாப்பு, பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து சித்ரா, சகாயராணி, தேன்மொழி ஆகியோர்பேசினர். ஆசிரியர்கள் கோவிந்தசாமி, கோவிந்தராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.