ஈரோடு: ''என் வீட்டில் வாட்ச்மேன், கேட், நாய் கிடையாது. எப்போது வேண்டுமானாலும் என்னை சந்திக்கலாம்,'' என, ஈரோடு கிழக்கு தொகுதி அ.தி.மு.க., (பழனிசாமி அணி) வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு தெரிவித்தார்.
ஈரோட்டில், அ.தி.மு.க., தலைமையிலான தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி பணிமனை திறப்பு விழா நடந்தது. முன்னாள் அமைச்சர் முனுசாமி தலைமை வகித்தார். முன்னாள் அமைச்சர்கள் ராமலிங்கம், செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி உட்பட பலர் பங்கேற்றனர்.
இந்நிகழ்ச்சியில், வேட்பாளர் தென்னரசு பேசியதாவது: இத்
தொகுதியில், 2 முறை எம்.எல்.ஏ.,வாக இருந்துள்ளேன். 3ம் முறையாக போட்டியிடுகிறேன். நடந்து முடிந்த அ.தி.மு.க., ஆட்சியில் தான், ஈரோட்டுக்கு, 504 கோடி ரூபாயில் ஊராட்சிகோட்டை குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டது. தினமும், 12 கோடி லிட்டர் தண்ணீர் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டு, தினமும், 6 கோடி லிட்டர் குடிநீர் தற்போது வினியோகிக்கப்படுகிறது. இன்னும், 50 ஆண்டுக்கு குடிநீர் பிரச்னை வராது.
ஈரோடு அரசு மருத்துவமனை வளாகத்தில், 81 கோடி ரூபாயில் திட்டமிடப்பட்டு, 61 கோடி ரூபாய்க்கு பல்நோக்கு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டுள்ளது. 52 கோடி ரூபாயில் கனி மார்க்கெட் வணிக வளாகம், 32 கோடி ரூபாயில் நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகம், 25 கோடி ரூபாயில் காளை மாட்டு சிலை அருகே வணிக வளாகம், அன்னை சத்யா நகரில், 850 அடுக்கு மாடி குடியிருப்பு, பிற பகுதியில், 1,200 குடியிருப்புகள், மேற்கு தொகுதியில், 3,050 குடியிருப்புகள், ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த, 2001-2006 தேர்தலில், 25,000 ஓட்டிலும், 2016-2021 தேர்தலில், 7,900 ஓட்டு வித்தியாசத்திலும் நான் வென்றுள்ளேன். இத்தேர்தலில், 50 ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில்
வெற்றி பெற செய்யுங்கள்.
என்னை யாரும் எளிதில் அணுகலாம். என் வீட்டுக்கு கேட் கிடையாது; வாட்ச்மேன் இல்லை, நாய் கூட கிடையாது. நான் எப்போதும் மக்களோடு மக்களாய் சுற்றி கொண்டே இருப்பேன். உங்கள் வீட்டு வேலைக்காரனாய் செயல்படுவேன். இவ்வாறு அவர் பேசினார்.