ஈரோடு: ஈரோட்டில், 'அ.தி.மு.க., கூட்டணி தேர்தல் அலுவலகம்' என வைக்கப்பட்டிருந்த, 'பிளக்ஸ் பேனர்' அகற்றப்பட்டு, 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என மாற்றினர். பின், மாலையில் 'தேசிய ஜனநாயக கூட்டணி' என மீண்டும் மாற்றினர். இதில், பிரதமர் மோடியின் படம் அகற்றப்பட்டதால், பா.ஜ.,வினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அ.தி.மு.க.,வில் பழனிசாமி, பன்னீர்செல்வம் ஆகியோர் தனி அணியாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். ஈரோடு கிழக்கு தொகுதியில் பழனிசாமி அணியில், முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பன்னீர்செல்வம் அணி சார்பில், செந்தில் முருகன் என்பவர் அறிவிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே பழனிசாமி அணி சார்பில் தேர்தல் பணிமனை திறப்பு விழா நேற்று நடந்தது. நேற்று முன்தினம் வரை அங்குள்ள பிளக்ஸ் பேனரில், 'ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி, அ.தி.மு.க., கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம்' என இருந்தது. அதில், முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர்., - ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் பெரியதாகவும், பிரதமர் மோடி படம் சிறியதாகவும் இருந்தன.இந்நிலையில், நேற்று காலை அந்த பிளக்ஸ் அகற்றப்பட்டு, மோடி படம் இல்லாத, 'ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைமையிலான, தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' தலைமை தேர்தல் அலுவலகம், என மாற்றினர். இச்செயல்பாடு, பா.ஜ.,வுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த பிளக்ஸ் பேனரில் வாசன், டாக்டர் கிருஷ்ணசாமி ஆகியோர் படங்கள் மட்டும் உள்ளதால், த.மா.கா., மற்றும் புதிய தமிழகம் கட்சி மட்டும் கூட்டணியில் இடம் பெற்றதை உறுதி செய்துள்ளது. மீண்டும் மாலை, 4:30 மணியளவில், 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என்ற இடத்தில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி, அதன் மீது, 'தேசிய ஜனநாயக கூட்டணி' என மாற்றினர்.
இதுகுறித்து, அ.தி.மு.க., நிர்வாகிகள் கூறியதாவது: பா.ஜ.,வுடன் அ.தி.மு.க., தரப்பில் பழனிசாமி மற்றும் பன்னீர்செல்வம் ஆகியோர் அணியினர் தனித்தனியாக பேசி, கூட்டணியை அமைக்க முயன்றனர். பா.ஜ., தலைமை முடிவு அறிவிக்காமல் இழுத்தடித்த நிலையில், நேற்று புதிதாக, அ.தி.மு.க., தலைமையிலான, 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என புதிய கூட்டணியை அறிவித்து செயல்பட துவங்கினர். அதற்குள், பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை, புதிய கூட்டணி அறிவிப்பு குறித்து, பொறுத்திருந்து பாருங்கள், எனக்கூறிச்சென்றார்.இந்நிலையில் மாலை, 4:30 மணிக்கு 'தேசிய ஜனநாயக முற்போக்கு கூட்டணி' என்ற இடத்தில் கறுப்பு ஸ்டிக்கர் ஒட்டி, அதன் மீது, 'தேசிய ஜனநாயக கூட்டணி' என மாற்றி
ஒட்டினர். என்ன நடக்கிறது என்பதே புரியவில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.