ஈரோடு: ஈரோடு, அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே, அ.தி.மு.க.,வின் பழனிசாமி அணி சார்பில் தலைமை தேர்தல் அலுவலக திறப்பு விழா நடந்தது. ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் ராமலிங்கம் வரவேற்றார். முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி தலைமை வகித்தார். கூட்டம் துவங்கிய நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அ.தி.மு.க., வேட்பாளராக முன்னாள் எம்.எல்.ஏ., தென்னரசு அறிவிக்கப்பட்டார். அவருக்கு அ.தி.மு.க., கரை வைத்த துண்டு போர்த்தி, அவரை முன்னிலைப்படுத்தி பேசினர்.
முன்னாள் அமைச்சர் நந்தம் விசுவநாதன் பேசுகையில், ''இடைத்தேர்தலில் ஆளும் கட்சிதான் வெற்றி பெறும். எதிர்க்கட்சிகள் வெற்றி பெறாது என பலரும் கூறுவார்கள். அது முற்றிலும் பொய்யானது. 1998ல் தி.மு.க., ஆட்சியின்போது நடந்த இடைத்தேர்தலில்தான் நான் முதன்முதலில் அ.தி.மு.க., சார்பில் வெற்றி பெற்றேன். தி.மு.க., ஆட்சி மீது மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். இத்தேர்தல் வெற்றி தமிழக அரசியலில் மாற்றத்தை ஏற்படுத்தும்,'' என்றார். முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசுகையில்,
''தி.மு.க., ஆட்சிக்கு வரும் முன் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், மின் கட்டணத்தை பல மடங்கு உயர்த்தினர். சொத்து வரி, பால் விலை, மக்கள் பயன்பாட்டு பொருட்கள் அனைத்தின் விலையையும் உயர்த்திவிட்டனர். இவற்றை மக்களிடம் எடுத்து செல்லுங்கள்,'' என்றார்.
முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி பேசியதாவது: கண்ணுக்கு எட்டிய துாரம் வரை எதிரிகளே இல்லை என, எதிரணியில் உள்ள தேசிய கட்சி தலைவர் கூறி வருகிறார். அவருக்கு
அவ்வாறு தெரியலாம். ஆனால், ஸ்டாலினுக்கு அப்படி தெரியவில்லை. அதனால்தான், அத்தனை அமைச்சர்கள், முன்னாள், இந்நாள் நிர்வாகிகள், எம்.எல்.ஏ., - எம்.பி.,க்களை அனுப்பி வைத்துள்ளார். அ.தி.மு.க.,வில் மட்டுமே ஒரு கிளை செயலாளர், ஒன்றிய செயலாளர், மாவட்ட செயலாளர், அமைச்சர் என்ற நிலையை கடந்து முதல்வர் வரை பழனிசாமி போல வர முடியும். இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி வெற்றி பெறாது என யாரும் நினைக்காதீர்கள். எம்.ஜி.ஆர்., காலத்தில் திண்டுக்கல்லிலும், ஜெயலலிதா காலத்தில் மதுரை கிழக்கு, மருங்காபுரியிலும் வென்றுள்ளனர். அதுபோல, பழனிசாமி வழிகாட்டுதலில் இத்தேர்தலில் வெற்றி காணுவோம். இவ்வாறு பேசினார்.
முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், தங்கமணி, வேலுமணி, கருப்பணன், செல்லுார் ராஜூ, உடுமலை ராதா
கிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி என பலரும் பங்கேற்றனர்.