ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதியில் அ.தி.மு.க., (பழனிசாமி அணி) சார்பில், 3ம் முறையாக களம் காண தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
ஈரோடு, கருங்கல் பாளையம் சொக்காய் தோட்டம்
பகுதியை சேர்ந்த தென்னரசு,65; கடந்த, 1988ல் ஈரோடு நகர செயலாளராகவும், 1992ல் நகர இணை செயலாளராகவும், 1995ல் மீண்டும் நகர செயலாளராகவும், 1999 முதல் கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர்., மன்ற செயலாளராகவும், 2000 முதல் நகர, அ.தி.மு.க., செயலாளர் உட்பட பல பொறுப்புகள் வகித்தார். இவர், 2001-2006 வரை ஈரோடு தொகுதியிலும், 2016-2021 வரை ஈரோடு கிழக்கு தொகுதியிலும் அ.தி.மு.க.,
- எம்.எல்.ஏ.,வாக வெற்றி பெற்றுள்ளார். தற்போது, 3ம் முறையாக அ.தி.மு.க., வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
இவர் சொந்தமாக ஸ்கிரீன் பிரின்டிங் பட்டறை, பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். ஈரோட்டில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு துணி, நுால் பதனிடும் ஆலை தலைவராக உள்ளார்.
இவருக்கு பத்மினி என்ற மனைவியும், கலையரசன் என்ற மகனும், கலைவாணி என்ற மகளும் உள்ளனர். ஈரோடு மாவட்ட சுமை துாக்குவோர்
மத்திய சங்க பொதுச் செயலாளர், பெரியார் மாவட்ட தொழில் வர்த்தக சபை துணை தலைவர், ஈரோடு ஸ்கிரீன் பிரின்டிங் அசோசியேசன் தலைவர், தமிழ்நாடு பிரின்டிங், பிராசசிங் சம்மேளன மாநில தலைவராகவும், தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர் அசோசியேசன் மாவட்ட துணை தலைவராகவும், ஈரோடு மாவட்ட பாரத் பெட்ரோலிய டீலர் அசோசியேசன் தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
பழனிசாமியிடம் வாழ்த்து
நேற்று மதியம், சேலம் நெடுஞ்சாலை நகரில், பழனிசாமியை சந்தித்து, தென்னரசு வாழ்த்து பெற்றார். அப்போது, முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கருப்பண்ணன், ராமலிங்கம், எம்.எல்.ஏ.,க்கள் ஜெயக்குமார், பண்ணாரி, த.மா.கா., இளைஞர் அணி தலைவர் யுவராஜா உள்பட பலர்
உடனிருந்தனர்.