ஈரோடு: ஈரோட்டில் ஊஞ்சல் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் சேலையில் கழுத்து இறுக்கி பலியானார்.
ஈரோடு வெங்கிடுசாமி வீதியை சேர்ந்த அமீர் அப்பாஸ் - சகிலாபானு தம்பதியர்; இவர்களுக்கு சைது பாத்திமா என்ற மகளும், சாகுல் ஹமீது, 12, என்ற மகனும் உள்ளனர். நேற்று முன்தினம் காலை, அமீர் அப்பாஸ் உடல்நலம் சரியில்லாததால் மனைவியுடன் ஈரோடு அரசு மருத்துவமனைக்கு சென்று விட்டார். வீட்டில் சாகுல் ஹமீது மட்டும் தனியாக இருந்தார். பின், மருத்துவமனையிலிருந்து தம்பதியர் வீடு திரும்பினர். வீட்டின் கதவு உள்பக்கமாக தாளிடப்பட்டிருந்தது. கதவை தட்டி பார்த்தும் திறக்கவில்லை. அமீர் அப்பாஸ் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தார். அப்போது வீட்டில் ஊஞ்சல் கட்டி விளையாடும் சேலையில், சாகுல் ஹமீதின் கழுத்து மாட்டிக்கொண்டு இறுக்கிய நிலையில் தொங்கி கொண்டிருந்தார்.
அதிர்ச்சியடைந்த தம்பதியர், உடனடியாக சிறுவனை மீட்டு ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருந்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், சிறுவன் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். ஈரோடு டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.