கோபி: கோபி அருகே, அளுக்குளியில், மகா கணபதி, பாலதண்டாயுதபாணி, அகிலாண்டேஸ்வரி அம்பிகை, உடனமர் சோழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த, ஜன., 26ல் விநாயகர் வழிபாட்டுடன் துவங்கியது. தொடர்ந்து, கோபி அருகே, பிள்ளையார்கோவில் துறை என்ற இடத்தில், பவானி ஆற்றிலிருந்து, கடந்த, 29ல், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், தீர்த்தக்குடம் மற்றும் முளைப்பாரி எடுத்து வந்தனர்.
நேற்று அதிகாலை, 4:00 மணிக்கு, விநாயகர் பூஜை, பரிவார யாக சாலை பூஜை நடந்தது. காலை 9:30 மணிக்கு, யாகசாலையில் இருந்து, தீர்த்தக்குடம் புறப்பாடு நடந்தது. அதையடுத்து மகா கணபதி, பாலதண்டாயுதபாணி, அகிலாண்டேஸ்வரி அம்பிகா சமேத சோழீஸ்வரர் கோவிலின், சாலகோபுரம் மற்றும் அனைத்து விமான கலசங்களுக்கும், சிவாச்சாரியார்கள் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்தனர்.