பாலத்தில் தடுப்பு சுவர்
கட்ட வேண்டுகோள்
கரூர்: கரூர் அருகே நெரூர் சாலையில் உள்ள, அரசு மேல்நிலைப்பள்ளி
அருகே, காவிரியாற்றின் கிளை வாய்க்கால் செல்கிறது. இந்த வாய்க்கால் பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் கட்டப்பட்டிருந்தது. ஆனால்,
கடந்த சில மாதங்களுக்கு முன் தடுப்பு சுவர் இடிந்து விட்டது.
புதிதாக தடுப்பு சுவர் கட்டப்படவில்லை. இதனால், அந்த வழியாக,
இரவு நேரத்தில் டூவீலர்களில் செல்லும், பொதுமக்கள் தவறி
வாய்க்காலில் விழுகின்றனர். இதனால், வாய்க்கால் மேல் பகுதியில்
உள்ள, பாலத்தின் இருபக்கமும் தடுப்பு சுவர் கட்ட, நீர்வளத்துறை
அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
துார்வாரப்படாத
சாக்கடை கால்வாய்
கரூர்: கரூர் அருகே, எஸ். வெள்ளாளப்பட்டி, சுற்று வட்டார பகுதிகளில், 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆனால், இப்பகுதியில் போதிய அளவில் கழிவுநீர் வடிகால் வசதி செய்து தரப்படவில்லை. ஏற்கனவே உள்ள கழிவுநீர் வடிகாலிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதை நாள்தோறும் சுத்தம் செய்வதில்லை. சில பகுதிகளில், திறந்த வெளியில், கழிவுநீர் தேங்கியுள்ளது. இதனால், எஸ்.வெள்ளாளப்பட்டியில் சுகாதார கேடு, தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, எஸ். வெள்ளாளப்பட்டியில் கழிவுநீர் கால்வாயை, துார்வாரி சுத்தம் செய்ய கரூர் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சின்டெக்ஸ் தொட்டியை
சீரமைக்க வலியுறுத்தல்
கரூர்: கரூர், எல்.சி.ஐ., காலனியில் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக,
பல ஆண்டுகளுக்கு முன் போர்வெல் அமைக்கப்பட்டு, சின்டெக்ஸ் தொட்டி வைக்கப்பட்டது. இதை அப்பகுதி மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது, சின்டெக்ஸ் தொட்டி சேதமடைந்துள்ளது. இதனால், பொது மக்கள் தண்ணீர் பிடிக்க முடியாமல் அவதிப்படுகின்றனர். சிமென்ட் மேடையும் சேதமடைந்துள்ளது. மழை காரணமாக, நிலத்தடி நீர் மட்டம் உயர்ந்துள்ள நிலையில், கோடைக்காலம் நெருங்குவதால்,
போர்வெல் குழாயை சீரமைத்து, புதிய சின்டெக்ஸ் தொட்டி
வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
டூவீலர்கள் மோதல்
முதியவர் படுகாயம்
குளித்தலை: குளித்தலையை அடுத்த, சேப்ளாபட்டியை சேர்ந்தவர் தங்கராசு, 60. இவர், நேற்று முன்தினம் மாலை 4:00 மணியளவில், டி.வி.எஸ்., எக்ஸெல் வாகனத்தில் மாகாளிபட்டி நோக்கி சென்று கொண்டிருந்தார். கழுகூர் - மகாளிப்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தபோது, எதிரே, இனுங்கூரை சேர்ந்த பாலமுருகன் ஓட்டி வந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கில் அதிவேகமாக வந்து மோதினார். இதில், தங்கராசு படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, மணப்பாறை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர், மேல் சிகிச்சைக்காக, திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தங்கராசு மனைவி சின்னபொண்ணு, 59, கொடுத்த புகாரின்படி, பாலமுருகன் மீது தோகைமலை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
பேக்கரி மாஸ்டர் தற்கொலை
குளித்தலை: குளித்தலை அருகே உள்ள கலிங்கப்பட்டியை சேர்ந்தவர் ரேவந்த், 28. பேக்கரி கடையில் மாஸ்டராக வேலை செய்து வந்தார். இவர், கடந்த சில நாட்களாக வேலைக்கு சரிவர செல்லாமல் ஊர் சுற்றி வந்தார். இதனால் அவரை, தாயார் மங்கையர்க்கரசி கண்டித்தார். இதில் மன உளைச்சலில் இருந்த ரேவந்த், நேற்று முன்தினம் காலை 10:00 மணியளவில் முத்தம்பட்டி நால்ரோடு அருகே விஷம் குடித்து மயங்கி கிடந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு, கரூர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு ரேவந்த்தை, பரிசோதித்த மருத்துவர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார். இதுகுறித்து மங்கையர்க்கரசி, கொடுத்த புகாரின்படி, லாலாப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.
தீண்டாமை ஒழிப்பு
உறுதிமொழி ஏற்பு
கரூர்: கரூர் மாவட்டம், க. பரமத்தி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தொட்டியபட்டி அரசு தொடக்கப்பள்ளியில் மகாத்மா காந்தி, நினைவு தினத்தை ஒட்டி, தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், தலைமை ஆசிரியர் மூர்த்தி தலைமை வகித்தார். மகாத்மா காந்தி நினைவு தினத்தையொட்டி, தலைமை ஆசிரியர் மூர்த்தி தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை வாசிக்க, மாணவ, மாணவியர், ஆசிரியர்கள், பணியாளர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
சட்ட விரோதமாக
மதுவிற்ற 4 பேர் கைது
கரூர்: கரூர் மாவட்டத்தில், சட்ட விரோதமாக மதுபானம் விற்பனை செய்த, 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
கரூர் மாவட்ட மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மா, சட்டம் - ஒழுங்கு போலீசார், தோகைமலை, மாயனுார், லாலாப்பேட்டை, பசுபதிபாளையம் உள்ளிட்ட பகுதிகளில், நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்ததாக, கணபதி, 42; முகேஷ், 23; செந்தில்குமார், 44; ராசு, 53; ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடமிருந்து, 31 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விபத்தில் விவசாயி பலி
கரூர்: கரூர் அருகே, அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், விவசாயி உயிரிழந்தார்.
திண்டுக்கல் மாவட்டம், குஜிலியம்பாறை பகுதியை சேர்ந்தவர் திருப்பதி, 52; விவசாயி. இவர், நேற்று முன்தினம் மாலை, கரூர் - மதுரை தேசிய நெடுஞ்சாலை ஆண்டாங்கோவில் பகுதியில், நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக சென்ற அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், திருப்பதி அதே இடத்தில் உயிரிழந்தார்.