கரூர்: பார்லிமென்ட்டில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் சில அம்சங்கள் வரவேற்கும் வகையிலும், சில எதிர்பார்ப்புகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றும் கரூர் தொழில் துறையினர் மாறுபட்ட கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக தொழில் துறையினர் தெரிவித்துள்ள கருத்துகள்:-
ஆர்.வி.எஸ்., செல்வராஜ், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர்: சிறு, குறு நிறுவனங்களின் மேம்பாட்டை கருத்தில் கொண்டு கடன் உத்தரவாத திட்டத்துக்கு கூடுதலாக, 9 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பல்வேறு இடங்களில், 30 ஸ்கில் இந்தியா சர்வதேச மையங்கள் அமைக்கப்படும் என்ற அறிவிப்பு, 'ஒரு மாவட்டம் ஒரு தயாரிப்பு' என்ற திட்டம் மூலம் பொருட்கள் மற்றும் புவியியல் குறியீட்டு பொருட்கள் தயாரிப்புகளை விளம்பரப்படுத்தவும், விற்பனை செய்யவும் மாநில அரசுகள் ஊக்குவிக்கப்படும் என்ற அறிவிப்பு, கழிவுநீர் தொட்டிகள், கால்வாய்கள் சுத்திகரிப்பில் 100 சதவீதம் இயந்திர பயன்பாடு, அனைத்து நகரங்களிலும் அமல்படுத்தப்படும் என்ற அறிவிப்பு போன்றவை வரவேற்கத்தக்கது.
ஆர்.தனபதி, தலைவர், கரூர் வீவிங் மற்றும் நிட்டிங் பேக்டரி ஓனர்ஸ் சங்கம்: மத்திய பட்ஜெட்டில் தனிநபர் வருமான வரி உச்சவரம்பு, 5 லட்சத்திலிருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தியது வரவேற்கத்தக்கது. டி.வி., மொபைல், கேமரா லென்ஸ் தயாரிப்பு உட்பட மின் சாதனங்களை உற்பத்தியை ஊக்குவிக்க, அதன் உதிரிபாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்படுகிறது. சிறு, குறு நடுத்தர தொழில் துறையினருக்கு கடன் வட்டித் தொகையை ஒரு சதவிகிதம் குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது. மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக, பேட்டரிக்கான சுங்கவரி 13 சதவீதம் குறைக்கப்பட உள்ளது நல்ல நடவடிக்கை.
ஏ.சி.மோகன், மாநில செயலாளர், தமிழ்நாடு அரிசி ஆலை உரிமையாளர்கள், நெல் அரிசி வணிகர்கள் சங்கங்களின் சம்மேளனம்: நாட்டின் முதுகெலும்பான விவசாயத்தை ஊக்குவிக்க, வேளாண் துறை மூலம் ரூ.20 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்க அம்சமாகும். இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையில், 3 ஆண்டுகளில் 1 கோடி விவசாயிகளுக்கு நிதி உதவி அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அனைத்து மாநில பொருட்களும் கிடைக்கும் வகையில் ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு வணிக வளாகம் அமைக்கப்படும். நதிகள் இணைப்பு, சாலை மேம்பாடு போன்ற அடிப்படை கட்டமைப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது வரவேற்கத்தக்கது. இயற்கை உரங்களை ஊக்குவிக்க, 'பி.எம்., பிரனாம்' என்ற புதிய திட்டம் மற்றும் இந்திய சிறுதானிய ஆராய்ச்சி மையம் உட்பட பல்வேறு அறிவிப்புகள் நாட்டின் வளர்ச்சியை வேகப்படுத்தும்.
பி.கோபாலகிருஷ்ணன், தலைவர், கரூர் ஜவுளி உற்பத்தியாளர் ஏற்றுமதியாளர்கள் சங்கம்: விவசாயத்துக்கு அடுத்தபடியாக அதிக வேலைவாய்ப்பை கொடுக்கக்கூடிய ஜவுளி தொழில், உலக பொருளாதார பின்னடைவின் காரணமாக மிகவும் தொய்வடைந்த நிலையில் உள்ளது. மந்தமாக இருக்கக்கூடிய ஜவுளி ஏற்றுமதி மற்றும் ஜவுளி உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் ஜவுளி துறைக்கு என சிறப்பு திட்டங்கள், இந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்படும் என மிகுந்த எதிர்பார்ப்போடு இருந்தோம். ஆனால், ஜவுளி தொழிலுக்கோ அல்லது ஜவுளி ஏற்றுமதிக்கு எந்தவிதமான சிறப்பு திட்டங்களும் நேரடியாக அறிவிக்கப்படவில்லை. அதிகபட்சமாக நிதி ஒதுக்கீடு பெறும் 9 அமைச்சகங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஜவுளி அமைச்சகம் இல்லை என்பதிலிருந்து ஜவுளி அமைச்சகத்துக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதியின் அளவு மிக குறைவு என புரிந்துகொள்ள முடிகிறது. ஜவுளித்துறைக்கு, மத்திய அரசின் பட்ஜெட்டில் முக்கியத்துவம் தரப்படாதது ஜவுளி உற்பத்தியாளர்களுக்கும், ஏற்றுமதியாளர்களுக்கும் மிகுந்த ஏமாற்றத்தை அளிக்கிறது.
கே.எஸ்., வெங்கட்ராமன், செயலாளர், கரூர் மாவட்ட வர்த்தக மற்றும் தொழில் கழகம்: மத்திய அரசு பட்ஜெட்டில் டிஜிட்டல் கரன்சி அறிமுகப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது வரவேற்கத்தக்கது. இதன் மூலம் காலப்போக்கில், நாட்டில் கருப்புப்பணம் முற்றிலுமாக ஒழிக்கப்படுவதற்கு வாய்ப்பு ஏற்படும். ரசாயன உர பயன்பாட்டை குறைக்க, கோவர்த்தன் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது. விவசாயம், தொழில், சுகாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஜி.எஸ்.டி., மூலம் அதிக வருவாய் அளிக்கும் வணிகர்களுக்கு எந்த திட்டமும் இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது.
ராஜாராம், தலைவர், காவிரி நீர் பாசன விவசாயிகள் நலச்சங்கம்: நாடு முழுவதும் 50 புதிய விமான நிலையங்கள் அறிவிப்பில் தமிழ்நாட்டுக்கு எவ்வளவு விமான நிலையம் ஒதுக்கப்படும். குறிப்பாக, கரூருக்கு விமானம் நிலையம் ஒதுக்க வாய்ப்பு உள்ளதா? என தெரியவில்லை. 157 நர்சிங் கல்லுாரிகளில் அதிகம் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்டால் வரவேற்கலாம். இளையோர் மேம்பாடு மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்களுக்கு, 10,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு, பசுமை எரிசக்தி மேம்பாட்டுக்கு 35,000 கோடி ரூபாய் கடன் உத்தரவாதம், மகளிர் சேமிப்புக்கு 7.5 சதவீதம் வட்டியில், புதிய சேமிப்பு திட்டம் ஆகியவற்றை பார்க்கும்போது வரவேற்ககூடிய பட்ஜெட்டாக உள்ளது.