கரூர்: '' தமிழ்நாட்டில் உள்ள 8 கோடி மக்களும், 'காவல் உதவி' செயலியை, மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்'' என, டி.ஜி.பி., சைலேந்திர பாபு தெரிவித்தார்.
கரூர் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், கேமராக்கள் கட்டுப்பாட்டு அறையை, நேற்று மாலை திறந்து வைத்த, டி.ஜி.பி., சைலேந்திர பாபு, நிருபர்களிடம் கூறியதாவது: தமிழ்நாடு காவல் துறை நவீனப்படுத்தப்பட்டுள்ளது. குற்றவாளிகளை, முகத்தை வைத்து கண்டுபிடிக்க, போலீஸ் ஸ்டேஷன்களுக்கு தனி செயலி உள்ளது. அதன்மூலம், 5,544 குற்றவாளிகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறை, திருச்சி என்.ஐ.டி., நிறுவன ஆலோசனைப்படி, புதிதாக நவீனப்படுத்தப்பட்டு தொடங்கப்பட்டுள்ளது.
ஸ்மார்ட் காவலர் செயல்பாடுகள் குறித்து, உயர் அதிகாரிகள் கண்காணிக்கவும், தனி செயலி செயல்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவிக்காக, 'காவல் உதவி' என்ற செயலியை அறிமுகப்படுத்தி உள்ளோம். இந்த செயலியை, தமிழகத்தில் உள்ள, 8 கோடி மக்களும், மொபைல் போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். ஒரு செயலி மூலம், 64 சேவைகளை, தமிழ்நாடு காவல் துறை செயல்படுத்தி வருகிறது.
கரூர் மாவட்டத்தில், குற்றங்களை தடுக்கவும், குற்ற வழக்குகளில் புலன் விசாரணைக்கு உதவிடும் வகையிலும், கரூர் நகரப்பகுதிகளில், 34 கேமராக்கள், வாகனங்களில் பதிவெண் மற்றும் வாகனங்களின் விபரங்களை தெரிவிக்க கூடிய, 64 கேமராக்கள், சோதனை சாவடிகளில், 40 கேமராக்கள் உட்பட 138 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
அந்த கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ள இடங்களை, கரூர் எஸ்.பி., அலுவலகத்தில் இருந்து, கண்காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டுள்ளது. அதன் மூலம், குற்றச்செயல்கள் தடுக்கப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அப்போது, திருச்சி மத்திய மண்டல போலீஸ் ஐ.ஜி., கார்த்திகேயன், திருச்சி சரக போலீஸ் டி.ஐ.ஜி., சரவணசுந்தர், கரூர் எஸ்.பி., சுந்தரவதனம், ஏ.டி.எஸ்.பி., கண்ணன் உள்ளிட்டபோலீஸ் அதிகாரிகள் உடனிருந்தனர்.