கரூர்: கரூர் அரசு கலை கல்லுாரியில், கலெக்டர் காரை வழிமறித்த புகாரில், கல்லுாரி உடற்கல்வி இயக்குனர் மீது, போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை, பாரதி தாசன் நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 43; கரூர் அரசு கலை கல்லுாரியில், உடற்கல்வி இயக்குனராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த மாதம், 25ல் தேசிய வாக்காளர் தின விழாவுக்கு, கலெக்டர் பிரபுசங்கர், அரசு கலை கல்லுாரிக்கு வந்தார்.
அப்போது, கல்லுாரி வளாகத்தில் வைக்கப்பட்டிருந்த, பிரபலங்கள் தொடர்பான, பிளக்ஸ் பேனர்களை அகற்றுமாறு, அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டதாக தெரிகிறது.
இதனால், அதிருப்தியடைந்த உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன், கலெக்டர் பிரபுசங்கர் காரை வழிமறித்து, அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக, கரூர் தாசில்தார் சிவக்குமார், நேற்று முன்தினம் தான்தோன்றிமலை போலீசில் புகார் அளித்தார்.
அதன்பேரில், உடற்கல்வி இயக்குனர் ராஜேந்திரன் மீது, தான்தோன்றிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.