குளித்தலை: தோகைமலை வட்டார அளவில் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு சிறப்பு முகாம் நடந்தது.
மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சார்பில் தோகைமலை அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த இம்முகாமுக்கு, மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி தலைமை வகித்தார்.
வட்டார வள மைய மேற்பார்வையாளர் தமிழ்செல்வன் முன்னிலை வகித்தார்.
இதில், தோகைமலை ஒன்றிய பகுதிகளில் உள்ள மனவளர்ச்சி குன்றியோர், புற உலக சிந்தனை குறைபாடு உள்ள குழந்தைகள், காது கேளாதோர், பார்வை குறைபாடு உள்ள குழந்தைகள், உடல் இயக்க குறைபாடு, மூளை முடக்குவாதம், தசை இயக்க குறைபாடு உள்ளிட்ட பல்வேறு குறைபாடுகள் உள்ள 53 குழந்தைகளுக்கு பல்வேறு சிறப்பு சிகிச்சைகள், ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இம்முகாமில், மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு மருத்துவ மதிப்பீடு, தேசிய மாற்று திறனாளி அடையாள அட்டை வழங்குதல் மற்றும் புதுப்பித்தல், புதிய மருத்துவ சான்றிதழ் வழங்குதல், தனித்துவ அடையாள அட்டை வழங்குதல், உதவி உபகரணங்களுக்கான பதிவு செய்தல், உதவித்தொகை பெறுவதற்கான பதிவுகள், முதல்வரின் காப்பீடு திட்டத்தில் பதிவு செய்தல், ஆதார் பதிவு செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
தொடர்ந்து, தமிழக அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கி வரும் நலத் திட்டங்கள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
இம்முகாமில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராதா, அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் கந்தவேல், வட்டார ஒருங்கிணைப்பாளர் சாதிக்பாட்ஷா உள்ளிட்ட சிறப்பு மருத்துவர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், பெற்றோர், மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.