கரூர்: கரூர் அருகே, ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டதோடு சாலை பணி கிடப்பில் போடப்பட்டதால், அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
கரூர், தான்தோன்றிமலை பஞ்சாயத்து யூனியன், ஆண்டாங்கோவில் மேற்கு பஞ்சாயத்து, மருத்துவ நகரில், 500க்கும் மேற்பட்ட வீடுகள், அரசு தொடக்கப்பள்ளி ஆகியவை உள்ளன. அப்பகுதியில், பல ஆண்டுகளாக மண் சாலை இருந்தது. இதனால், தார் சாலை அமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில், மருத்துவ நகரில் சில மாதங்களுக்கு முன், புதிதாக தார் சாலை அமைக்க, சிமென்ட் கலவையுடன், ஜல்லிக்கற்கள் கொட்டப்பட்டன. ஆனால், அதன் பிறகு தார் ஊற்றி பணிகளை நிறைவு செய்யாமல் கிடப்பில் போட்டுவிட்டனர்.
இதற்கிடையே, அவ்வப்போது பெய்த மழை காரணமாக, சிமென்ட் கலவை பெரும்பாலும் கரைந்து, ஜல்லிக்கற்கள் சிதறி கிடக்கின்றன. இதனால், அந்த வழியாக பொதுமக்கள் நடந்து கூட, செல்ல முடியாமல் பெரும் அவதிப்படுகின்றனர்.
குறிப்பாக, டூவீலர்களின் டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகும் நிலை உள்ளது. எனவே, மருத்துவ நகரில் உடனடியாக தார் சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் பெரிதும் எதிர்பார்க்கின்றனர்.