சென்னையில் திறந்தவெளியில் சிறுநீர், மலம் கழிப்போரிடம், 100 ரூபாய் அபராதம் வசூலிக்க, மாநகராட்சி ஆலோசித்து வருகிறது. மேலும், கழிப்பறைகளில் கட்டணம் வசூலிப்பவர்கள் குறித்து மாநகராட்சி மேயர், கமிஷனரிடம் தபால் வாயிலாக புகார் அளிக்கவும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.
சென்னை மாநகராட்சியில், 866 இடங்களில், 7,471 கழிப்பறைகள் உள்ளன. இந்த கழிப்பறைகளை பொதுமக்கள் இலவசமாக பயன்படுத்திக் கொள்ளலாம்.ஆனால், உள்ளூர் அரசியல்வாதிகள் கழிப்பறைகளை ஆக்கிரமித்து, மாதத்திற்கு 5 லட்சம் ரூபாய்க்கு மேல் கட்டணமாக வசூலித்தனர்.
அவ்வப்போது, மாநகராட்சி சார்பில் கழிப்பறைகளை ஆக்கிரமித்துள்ளவர்கள் மீது, போலீசில் புகார் அளிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ஆனாலும், பல இடங்களில் கழிப்பறைகள் ஆக்கிரமிக்கப்பட்டு கட்டணம் வசூலிக்கப்படுவது தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், மிகவும் பழுதடைந்த மற்றும் அசுத்தமடைந்த கழிப்பறைகளை இடித்துவிட்டு, புதிய கழிப்பறைகள் அமைக்கும் பணியை, மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
அந்த வகையில், 100க்கும் மேற்பட்ட கழிப்பறைகளை இடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, 20க்கும் மேற்பட்ட கழிப்பறைகள் இடிக்கப்பட்டு, அங்கு புதிதாக நவீன முறையிலான கழிப்பறைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
மேலும், அ.தி.மு.க., ஆட்சிக் காலத்தில் ஏற்படுத்தப்பட்டு பயனற்றுப் போன 'இ - ழிப்பறை'களையும், மீண்டும் சீர்படுத்தி பயன்படுத்தும் பணியையும், மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.அந்த வகையில், 37 இ- கழிப்பறைகள் சீரமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 107 இ - கழிப்பறைகளை சீரமைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.
இதைத்தவிர, சென்னையில் பேருந்து நிறுத்தங்கள், சந்தைப் பகுதிகள், மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதிகள், குடிசைப் பகுதிகள் உள்ளிட்ட இடங்களில், புதிதாக 358 ஆண் - பெண் என, இருபாலர் பயன்படுத்தக்கூடிய நவீன கழிப்பறைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
மேலும், 1,000க்கும் மேற்பட்ட இடங்களில் கழிப்பறை வசதிகளை மாநகராட்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், திறந்தவெளி கழிப்பிடங்கள் இல்லாத பகுதியாக சென்னையை அறிவிக்க, மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.அந்த வகையில் பொது இடங்கள், நீர்நிலையோரங்களில் சிறுநீர், மலம் கழித்தால், 100 ரூபாய் அபராதம் விதிக்க மாநகராட்சி ஆலோசித்து வருகிறது.
இதுகுறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
சென்னையில் தனியார் பங்களிப்புடன், மாநகராட்சி கழிப்பறைகள் பராமரிக்கப்பட உள்ளன. மேலும், தேவையான இடங்களில், 24 மணி நேரமும் கழிப்பறைகள், துாய்மையான பராமரிப்பில் செயல்படும்.
அதேபோல், வேறு எந்தெந்த பகுதிகளுக்கு, எத்தனை கழிப்பறை தேவை என்ற விபரமும் சேகரிக்கப்பட்டு வருகிறது. அங்கெல்லாம், விரைவில் கழிப்பறை வசதி ஏற்படுத்தப்படும்.
எனவே, சிறுநீர் மற்றும் மலம் கழிக்க கழிப்பறைகளை மட்டுமே பொதுமக்கள் பயன்படுத்த வேண்டும். மீறி, பொது இடங்களில் இயற்கை உபாதைகளை கழித்தால், அவர்களுக்கு காவல் துறை அல்லது மாநகராட்சி பணியாளர்கள் வாயிலாக, 100 ரூபாய் அபராதம் விதிக்கும் நடைமுறை அமல்படுத்த திட்டமிட்டுள்ளோம்.
மேலும், சுகாதார துாதுவர்களாக நியமிக்கப்பட்டுள்ள பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள் வாயிலாகவும் அபராதம் விதிக்கலாமா என ஆலோசித்து வருகிறோம்.
மாநகராட்சி கழிப்பறைகளுக்கு கட்டணம் கேட்டால், பொதுமக்கள் யாரும் கொடுக்க வேண்டாம்.
சம்பந்தப்பட்டவர்கள் மீதோ அல்லது குறிப்பிட்ட கழிப்பறையில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்றோ, சென்னை மாநகராட்சி மேயர் அல்லது கமிஷனருக்கு தபால் வாயிலாகவும், 1913 என்ற தொலைபேசி எண்ணிலும் புகார் அளிக்கலாம்.உடனடியாக சம்பந்தப்பட்ட கழிப்பறை மீட்கப்பட்டு, ஆக்கிரமித்தவர்கள் மீது போலீசில் வழக்குப்பதிவு செய்து, நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, மாநகராட்சி நடவடிக்கைகளுக்கு, பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர். - நமது நிருபர் -