நாகப்பட்டினம்:நாகை மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் அறுவடைக்கு தயாராக இருந்த சம்பா பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நெல் கொள்முதல் நிறுத்தப்பட்டதால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.
காவிரியின் கடைமடையான நாகை மாவட்டத்தில் நடப்பு சம்பா பருவத்திற்கு தேவையான தண்ணீர் இருப்பு, சாதகமான பருவநிலை சூழலால், 1 லட்சத்து 67 ஆயிரம் ஏக்கர் சம்பா சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில், 1 லட்சத்து 62 ஆயிரம் ஏக்கரில் சம்பா சாகுபடி நடந்தது.
தற்போது சம்பா நெல் அறுவடை பணி துவங்கி உள்ளது.
இந்நிலையில் வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையால், கடைமடையில் கனமழை விட்டு விட்டு பெய்தது.
இதனால், பல இடங்களில் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்கதிர்கள் விளைநிலத்தில் சாய்ந்தன.
விளைநிலங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் ஊடு பயிரான இளம் உளுந்து பயிர்கள் அழுகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
விளைநிலங்களில் தேங்கிய நீரால் அறுவடை இயந்திரங்களை வயலில் இறக்க முடியாமல் அறுவடை நிறுத்தப்பட்டுள்ளன.
மழைக்கு முன்னதாக அறுவடை செய்து நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு கொண்டு வரப்பட்ட நெல் மூட்டைகளையும், மழையை காரணம் காட்டி கொள்முதல் செய்ய அலுவலர்கள் மறுப்பதால், கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கியுள்ளன.
மழையில் இருந்து நெல் மூட்டைகளை தார்ப்பாயை மூடி பாதுகாக்கும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர். கடைமடையில் நடப்பு சம்பா பருவத்தில் மகசூல் அதிகரித்தும், எதிர்பாரா மழையால் பயிர்கள் சாய்ந்து அறுவடை பாதிப்பால் விவசாயிகள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.