குமாரபாளையம்:தேசிய மல்யுத்த போட்டியில், குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறி தொழிலாளி மகன், இரண்டாமிடம் பிடித்து, வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை படைத்தார்.
எனினும், வறுமை அவரை துரத்துவதால், தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்க வாய்ப்பு கிடைத்தும், அதற்கு நிதியில்லாமல் தவிக்கிறார்.
நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்த விசைத்தறி கூலித்தொழிலாளி கிருபாகரன். இவரது மனைவி ரேவதி.
இவர்களது மகன்கள் சதீஷ்குமார், சக்திவேல், 24. இவர்களில் சக்திவேல், 'டிப்ளமோ' முடித்துவிட்டு, கடையில் வேலை செய்கிறார்; ஊர்காவல் படையிலும் பணிபுரிகிறார்.
மல்யுத்தம் மீது ஆர்வம் ஏற்பட, அதற்கான பயிற்சியை மேற்கொண்டார். அதை முடித்த சில மாதங்களில், திருச்செங்கோட்டில், 2021 செப்டம்பரில் மாநில அளவில் நடந்த மல்யுத்தப்போட்டியில் அசத்தி தங்கம் வென்றார்.
அக்டோபரில் கோவாவில் நடந்த தேசிய போட்டியில் பங்கேற்ற அவரால் பரிசு பெறமுடியவில்லை.
இருந்தும் பாரம்பரிய மல்யுத்த சங்க பொதுச்செயலர் இளங்கோவன் தலைமையில், கடந்த, 19 முதல், 22 வரை, மகாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில், 10வது தேசிய அளவில் நடந்த போட்டியில் தமிழக அணியில் இடம் பிடித்தார்.
அதில், 70 கிலோ பிரிவில் சக்திவேல் இரண்டாமிடம் பிடித்து வெள்ளி வென்றார்.
இதுகுறித்து சக்திவேல் கூறியதாவது:
பயிற்சியாளர் இளங்கோவன், மாநில, தேசிய போட்டிகளில் வெற்றி பெற்று வருகிறார்.
அவரை பார்த்து மல்யுத்தப்போட்டியில் சாதனை படைக்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டது. அவரிடம் பயிற்சி பெற்றேன். மாநில போட்டியில் முதலிடம் பிடித்தேன். தற்போது தேசிய அளவில் இரண்டாமிடம் பிடித்தது மகிழ்ச்சி.
மெக்சிகோ நாட்டில் சர்வதேச போட்டி நடக்க உள்ளது. அதற்கு தேர்வாகி விட்டேன். ஆனால் பங்கேற்க, வறுமை தடையாக உள்ளது. யாரேனும் நிதி உதவி வழங்கினால் அந்த போட்டியிலும் சாதனை படைப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
சாதிக்க காத்திருக்கும் இளைஞருக்கு உதவ நினைப்பவர்கள், 88389 37573 என்ற மொபைல் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.