ஓசூர்:ஓசூரில், கோட்டை மாரியம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு, கிடாவெட்டி, 3,000 பேருக்கு பிரியாணி பரிமாறப்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மாநகராட்சி, 24வது வார்டில் சுயேட்சையாக போட்டியிட்ட மஞ்சம்மா வெற்றி பெற்றார். இதற்காக, ஓசூர் ராம்நகர் கோட்டை மாரியம்மனுக்கு, கடந்த இரு நாட்களாக சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதையொட்டி, நேற்று கிடா மற்றும் கோழிகள் பலி கொடுக்கப்பட்டு, 3,000 பேருக்கு பிரியாணி, 'கபாப்' என, அசைவ விருந்து பரிமாறப்பட்டது.
ராம்நகர் பகுதி மக்கள் திரளாக விருந்திற்கு வந்திருந்தனர். மாநகராட்சி, அ.தி.மு.க., கவுன்சிலர் குபேரன், பா.ஜ., மேற்கு மாவட்ட தலைவர் நாகராஜ், அ.தி.மு.க., பகுதி செயலர் ராஜி, தி.மு.க., ஒன்றிய செயலர் கஜேந்திரமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.