மாங்காடு, குன்றத்துார் - குமணன்சாவடி பிரதான சாலையில், மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சாலையின் இருபுறங்களிலும் கால்வாய், அதன் மீது நடைபாதை அமைக்கப்பட்டு உள்ளது.
நடைபாதையை முழுதும் ஆக்கிரமித்து, ஏராளமான கடைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இக்கடைகளுக்கு வரும் வாகனங்களால், காலை மற்றும் மாலையில், பிரதான சாலையில் கடும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டன.
இது குறித்து நம் நாளிதழில், ஜன., 12ம் தேதி செய்தி வெளியானது.
இதன் எதிரொலியாக, பொதுமக்களுக்கு இடையூறாக நடைபாதையை ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட கடைகளை, நகராட்சி அதிகாரிகள் நேற்று, அதிரடியாக அகற்றினர்.
2 கடைகளுக்கு 'சீல்'
மாங்காடு நகராட்சி கமிஷனர் சுமா கூறியதாவது:
மாங்காடு நகராட்சிக்கு உட்பட்ட இரண்டு கடைகள், நீண்ட காலமாக வரிபாக்கி செலுத்தாமல் இருந்தன. அந்த கடைகளை, பூட்டி'சீல்' வைத்துள்ளோம்.
வரி வசூல் செய்ய ஏதுவாக ஆங்காங்கே முகாம்கள் அமைத்துள்ளோம். தவிர, வீடுகளுக்கே சென்று வரி வசூலித்து, ரசீது வழங்கும் பணியில் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.
நகராட்சியில் 1 கோடி ரூபாய்க்கு மேல் வரி பாக்கி உள்ளது. சட்ட நடவடிக்கை எடுக்கும் முன், அனைவரும் வரி செலுத்த கேட்டுக்கொள்ளப்படுகிறது.
விடுமுறை நாளான ஞாயிற்றுக் கிழமைகளிலும், மாங்காடு நகராட்சியில் பொதுமக்கள் வரி செலுத்தலாம்.
இவ்வாறு அவர் கூறினர்.