கிருஷ்ணகிரி:கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில், 23 அணிகளின் அமைப்பாளர்களின் பட்டியல், அறிவிப்புக்கு முன்பே வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட, தி.மு.க.,வில், 18 அணி நிர்வாகிகளுக்கான நேர்காணல், சமீபத்தில் நடந்து முடிந்தது. மீதமுள்ள, ஐந்து அணிகளுக்கான நேர்காணல் இன்னும் நடக்கவில்லை.
இந்நிலையில் நேற்று, கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்டத்தின், 23 அணி அமைப்பாளர்களின் பட்டியல் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதில், மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., தன் சமூகத்தினருக்கே வாய்ப்பளித்து உள்ளதாகவும், வருங்கால தொழில்துறை அமைச்சர் எனவும் குறிப்பிட்டு இருந்தனர்.
தி.மு.க.,வில் நீண்ட காலமாக உள்ளவர்களுக்கு வாய்ப்பளிக்காமல், பணம் இருப்பவர்களுக்கே வாய்ப்பு வழங்கப்படுகிறது என்ற தகவலையும் பரப்பினர்.
இதுகுறித்து, மாவட்ட செயலர் மதியழகன் எம்.எல்.ஏ., கூறியதாவது:
தி.மு.க., அணிகளுக்கான நேர்காணல் இன்னும் முழுமையாக முடிவடையவே இல்லை. அதற்குள் இதுபோன்ற பட்டியலை போலியாக வெளியிட்டுள்ளனர். அதில், 1 சதவீதம் கூட உண்மையில்லை. வேண்டுமென்றே, இதுபோன்ற தகவல்களை பரப்பும் விஷமிகள் மீது, நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.