தஞ்சாவூர்:கும்பகோணம் அருகே, வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த, வெளி மாநில மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் அருகே, மணஞ்சேரி பகுதியில், அனுமதியின்றி வெளி மாநில மது பாட்டில்கள் அதிக அளவில் இருப்பு வைத்து, விற்பனை செய்வதாக, போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அந்த இடத்திற்கு சென்ற கும்பகோணம் தாலுகா போலீசார், ஒரு வீட்டில் சோதனையிட்ட போது, அங்கு 180 மி.லி., அளவு கொண்ட 1,824 பாட்டில்களும், டின் பீர் 24 பாட்டில்களும், 720 மி.லி., அளவு கொண்ட 12 பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு 2 லட்சம் ரூபாய்.
போலீசார் விசாரணையில், பஞ்சாயத்து தலைவர் முருகன், அவரது உறவினர் சக்திவேல், ஈஸ்வர் உட்பட நான்கு பேருக்கு இதில் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. போலீசார், அவர்களை தேடி வருகின்றனர்.
இதில் முருகன், சக்திவேல், ஈஸ்வர் ஆகியோர் மீது கும்பகோணம் மற்றும் பல்வேறு போலீஸ் ஸ்டேஷனில், ஏற்கனவே வழக்குகள் உள்ளன.