திருச்சி:திருச்சி மாநகராட்சி மண்டல ஆலோசனை கூட்டத்தில், அ.தி.மு.க., பெண் கவுன்சிலருக்கு பதிலாக, அவரது கணவர் பங்கேற்றதால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது.
திருச்சி மாநகராட்சி, அரியமங்கலம், மூன்றாவது மண்டல கவுன்சிலர்கள் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் மண்டல தலைவர் மதிவாணன் தலைமையில் நடந்தது.
கூட்டத்தில், அந்த மண்டலத்துக்கு உட்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்றனர். இதில், மாநகராட்சியின், 37வது வார்டு கவுன்சிலராக உள்ள அ.தி.மு.க.,வைச் சேர்ந்த அனுசுயா பங்கேற்கவில்லை. அவருக்கு பதிலாக, அவரது கணவரும், முன்னாள் கவுன்சிலருமான ரவிசங்கர் பங்கேற்றார்.
கூட்டம் முடியும் வரை இருந்து, மற்ற கவுன்சிலர்களுடன் இணைந்து, கூட்ட நிகழ்வில் பங்கேற்ற அவரை, அங்கிருந்த மாநகராட்சி அதிகாரிகள் ஒன்றும் சொல்ல முடியாமல் தவித்தனர்.
பெண் உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு பதிலாக, அவர்களின் குடும்பத்தார் செயல்படக் கூடாது என, தமிழக அரசு கண்டிப்பான உத்தரவு பிறப்பித்தும், அ.தி.மு.க., பெண் கவுன்சிலருக்கு பதில், அவரது கணவர், மாநகராட்சி கூட்டத்தில் பங்கேற்றது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.