திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சியில் வரிவிதிப்பு பைல்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருந்த இரண்டு ஊழியர்கள் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர். ஒருவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.
திருநெல்வேலி மாநகராட்சி மேலப்பாளையம் மண்டல தலைவராக தி.மு.க.,வின் கதீஜா இக்லாம் பாசிலா உள்ளார். இவரது தந்தை சாகுல் அக்கட்சி பகுதி செயலாளராக உள்ளார்.
அண்மையில் தி.மு.க.,பிரமுகர் ராபர்ட் என்பவர், புதிய வீடு ஒன்றிற்கு வரி விதிப்பிற்காக ரூ. 30 ஆயிரம் மண்டல தலைவர் கேட்டதாகவும் ,ரூ 10. ஆயிரம் கொடுத்துள்ளதாகவும் தி.மு.க., பிரமுகர்களிடமே பண வசூலிக்கிறீர்கள் என விரக்தியாக பேசிய ஆடியோ வெளியானது. அதற்கு பதிலளித்து வரிவிதிப்பிற்கு லஞ்சம் எதுவும் கேட்கவில்லை. அரசு கட்டணம்தான் வசூல் செய்யப்பட்டது என மண்டல தலைவர் கதீஜா இக்லாம் பாசிலா பேசும் பதில் ஆடியோ வெளியானது.
'சஸ்பெண்ட்': இதனிடையே மண்டலத்தில் வரிவிதிப்புகளுக்கு லஞ்சம் கேட்டு பைல்கள் தாமதப்படுவதாக வந்த புகாரில் மாநகராட்சி கமிஷனர் சிவகிருஷ்ணமூர்த்தி நேற்று பகலில் மேலப்பாளையம் அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டார். காரணமின்றி பைல்களை தாமதப்படுத்திய பில் கலெக்டர் வேல்சாமி 58, பில் இலாகா கிளார்க் ரிபாயி 40, ஆகியோரை 'சஸ்பெண்ட் 'செய்தார். மற்றொரு பில் கலெக்டரை வேறு மண்டலத்திற்கு மாற்றம் செய்து உத்தரவிட்டார்.