தஞ்சாவூர்:டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்வதால், சம்பா நெல் அறுவடை மற்றும் கொள்முதல் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன.
டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூரில், 3.47 லட்சம் ஏக்கர், திருவாரூரில் 3.75, நாகையில் 1.67, மயிலாடுதுறையில் 1.80 லட்சம் ஏக்கர் என மொத்தம், 10.69 லட்சம் ஏக்கரில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது.
தற்போது, தஞ்சாவூரில் ஒரு லட்சம், திருவாரூரில், 55 ஆயிரம், நாகையில், 40 ஆயிரம், மயிலாடுதுறையில், 38 ஆயிரம் என மொத்தம், 2.33 லட்சம் ஏக்கரில் அறுவடை பணி முடிந்துள்ளதாக வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று முழுதும் டெல்டா மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது. இதனால், அறுவடைக்கு தயாரான ஆயிரக்கணக்கான ஏக்கரில் நெற்கதிர்கள், வயலில் சாய்ந்தன.
இருப்பினும், வயலில் மழை நீர் தேங்காததால், நெல்மணிகளுக்கு பாதிப்பு ஏதும் இல்லை. தொடர்ந்து, மழை பெய்தால் நெல்மணிகள் உதிர்ந்து மகசூல் பாதிக்கும் நிலை ஏற்படும்.
அறுவடை பணி பாதிக்கப்பட்டுள்ளதால், வயல்களில், அறுவடை இயந்திரங்கள் அப்படியே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
மேலும், நெல்லின் ஈரப்பதம், 19 சதவீதத்துக்கும் மேலாக அதிகரித்ததால், அரசு நேரடி கொள்முதல் நிலையங்களில் கொள்முதல் பணி நடைபெறவில்லை.
இதையடுத்து, நெல் கொள்முதல் நிலையங்களில் நெல்லை, விவசாயிகள் தார்பாய் போட்டு மூடி வைத்து காத்துக் கிடக்கின்றனர்.
விவசாயிகள் கூறியதாவது:
பருவ மழையை கடந்து, பயிர்கள் நல்ல முறையில் வளர்ந்தன. அறுவடை செய்யும் நேரத்தில், நெற்பயிர்கள் மழையால் சாய்ந்துள்ளன.
இதனால், இயந்திரங்களால் அறுவடை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு வாரம் கழித்து தான் அறுவடை பணிகளை துவங்க முடியும். மழை தொடர்ந்தால், மகசூல் இழப்பு ஏற்படும் வாய்ப்புள்ளது.
மேலும், இயந்திரத்தில் அறுவடைக்கான நேரமும் கூடுலதாகும் என்பதால், செலவும் அதிகமாகும்.
இவ்வாறு தெரிவித்தனர்.