கூடலுார்:முல்லைப் பெரியாறு அணைக்கு கட்டுமான பொருட்களை கொண்டு சென்றவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து, கேரள போலீசார் கெடுபிடி செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து, போராட்டம் நடத்த தமிழக விவசாயிகள் முடிவு செய்துள்ளனர்.
கேரள மாநிலம், இடுக்கி மாவட்டத்தில் உள்ள முல்லை பெரியாறு அணை தமிழக நீர்வளத்துறை பராமரிப்பில் உள்ளது.
இந்த அணை பராமரிப்பு பணிகளை செய்வதற்காக, தமிழக நீர்வளத்துறையினர், ஜல்லி கற்கள், மணல், சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருட்களை இரண்டு தினங்களுக்கு முன் வல்லக்கடவு வனப்பாதை வழியாக நான்கு மினி லாரியில் கொண்டு சென்றனர்.
டிரைவர்களுடன் தடையை மீறி மூன்று லோடுமேன்கள் அணைப்பகுதிக்கு வந்ததாக கேரள போலீசார் மூவர் மீது வழக்குப் பதிவு செய்தனர். இதற்கு தமிழக விவசாயிகளிடையே எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
பெரியாறு வைகை பாசன விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பாளர் அன்வர் பாலசிங்கம் கூறியதாவது:
முல்லை பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக பிப்., 6 வரை கட்டுமான பொருட்கள் வல்லக்கடவு வனப்பாதை வழியாக வாகனம் மூலம் கொண்டு செல்ல உத்தரவு உள்ளது.
அந்த அடிப்படையில் நான்கு வாகனங்களில் கொண்டு சென்ற போது, டிரைவருக்கு துணையாக சென்ற மூன்று பேர் மீது கேரள போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கட்டுமான பொருட்களை ஏற்றுவதற்கும், இறக்குவதற்கும், ஆபத்தான பாதையில் செல்லும் போது வாகனங்கள் சிக்கிக் கொண்டால் அதற்கு உதவி செய்வதற்கும் சென்ற இவர்களை, தடையை மீறி சென்றதாக கேரள போலீசார் வழக்குப் பதிவு செய்தது ஏற்றுக்கொள்ள முடியாது.
இரு மாநில உறவை சீர்குலைக்கும் வகையில் இச்செயல்பாடு உள்ளது. அணையை நம்பி தமிழகத்தில் உள்ள ஒரு கோடி மக்களின் குடிநீர் ஆதாரமும், 10 லட்சம் விவசாயிகளின் வாழ்க்கையும் உள்ளன.
வழக்கு பதியப்பட்டதை திரும்ப பெறாவிட்டால், விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பெரியாறு வகை பாசன விவசாயிகள் சங்க செயலர் பொன்காட்சிக் கண்ணன் கூறியதாவது:
அணையின் கட்டுப்பாடு முழுதையும் தமிழக நீர்வளத்துறை எடுத்துக் கொள்வதற்கான பணிகளில் இறங்க வேண்டும். அணையில் உள்ள கேரள போலீசாரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
தமிழக அரசிடம் இருந்து சம்பளம் பெற்றுக் கொண்டு, தமிழக அரசுக்கு எதிராகவே அவர்கள் செயல்படுகின்றனர். கட்டுமான பொருட்களை கொண்டு செல்வதற்கு தடை விதிக்கும் நோக்கத்தோடு வழக்கு போடும் கேரள போலீசாரை எதிர்த்து விவசாயிகள் போராட்டம் நடத்த உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.