திருச்சி:பள்ளியில் ஆசிரியர் திட்டியதால், பத்தாம் வகுப்பு மாணவி, 'பினாயில்' குடித்து, தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
திருச்சி, மேலப்புதுாரில் புனித அன்னாள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இங்கு, பாலக்கரை பகுதியைச் சேர்ந்த, 15 வயது மாணவி, பத்தாம் வகுப்பு படிக்கிறார். அவரது தந்தை வெளிநாட்டில் உள்ளார்.
ஜன., 31ம் தேதி விடுமுறை எடுத்து, மறுநாள் மாணவி பள்ளி சென்றுள்ளார். 'இப்படி அடிக்கடி விடுமுறை எடுத்தால் பெயிலாகி விடுவாய்' என்று கூறி, பள்ளி ஆசிரியர், மாணவியை வகுப்பறைக்கு வெளியே நிற்க வைத்ததாக கூறப்படுகிறது.
இதனால், அந்த மாணவி, நேற்று காலை பள்ளிக்கு செல்ல பயந்து, வீட்டில் இருந்தார். பின், வீட்டில் இருந்த பினாயில் திரவத்தை குடித்து, தற்கொலைக்கு முயன்றார்.
உடனடியாக அவரை, பீமநகரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு மாணவி சிகிச்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், ஆசிரியர் திட்டியதால் தான் மாணவி தற்கொலைக்கு முயன்றார் என்று கூறி, திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில், மாணவியின் குடும்பத்தார் புகார் அளித்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.