பழநி:பழநி தைப்பூச திருவிழா நாளை நடக்க உள்ளது. பாதயாத்திரையாக வரும் பக்தர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் தைப்பூச திருவிழா ஜன.29ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், தந்த பல்லாக்கில் வீதியுலா நடக்கிறது. நேற்று வெள்ளி யானையில் சுவாமி புறப்பாடு நடந்தது.
விழாவின் ஆறாம் நாளான இன்று காலை 9:00 மணிக்கு தந்த பல்லாக்கில் ரத வீதி உலா, இரவு 7:00 மணிக்கு வள்ளி, தெய்வானை, முத்துக்குமாரசுவாமி திருக்கல்யாணம் நடக்கிறது.
தைப்பூசத்தையொட்டி நாளை காலை தோளுக்கினியானில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி, தெய்வானை சண்முக நதிக்கு எழுந்தருள தீர்த்தம் கொடுத்தல் நடைபெறும். மாலை 4:30 மணிக்கு தேரோட்டம் ,பிப்.7 ல் இரவு 7:00 மணிக்கு தெப்ப திருவிழா நடக்கிறது.
குவிந்தனர்
இதை தொடர்ந்து பழநிக்கு வெளி மாவட்ட பக்தர்கள் அதிகமாக வந்துகுவிந்தபடி உள்ளனர். அலகு குத்தி, காவடி, தீர்த்த குடம் எடுத்து வருவோர் முடி காணிக்கை செலுத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
அன்னதானம், சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ மையங்கள் அமைக்கப்பட்டு வலி நிவாரண உதவி வழங்கப்படுகிறது. கோயில் நிர்வாகம் சார்பில் தற்காலிக கழிப்பறைகள், குளியல் அறைகள்,பக்தர்கள் தங்க இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காரைக்குடியில் இருந்து பாரம்பரியமாக தைப்பூசத்திற்கு காவடி எடுத்து வரும் குழுவினர் ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயிலில் இருந்து பழநி நோக்கி வந்தனர்.
ராமேஸ்வரம் மாற்றுத்திறனாளி பக்தர் பழனி, மூன்று சக்கர சைக்கிள் வாகனத்தில் ஒன்பது நாட்களாக பயணம் செய்து பழநி வந்தார்.
அவர் கூறுகையில்,பழநி முருகனை ஆண்டுதோறும் வந்து வணங்கி செல்கிறேன். என் வாழ்வில் மாற்றம் ஏற்படும் என்று நம்பிக்கை உள்ளது, என்றார்.