மூணாறு:கேரள மாநிலம் இடுக்கி அணையை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு மே 31 வரை அனுமதி நீடிக்கப்பட்டது.
இடுக்கி மாவட்டத்தில் உள்ள இடுக்கி அணை வரலாற்று சிறப்புமிக்கது. இடுக்கி அணை ஆர்ச் வடிவிலும் அதன் அருகே செருதோணி அணை நேர் வடிவிலும் கட்டப்பட்டுள்ளன.
அவற்றின் தண்ணீர் ஒன்றாக தேங்கும் என்பதால் அணை நிரம்பும்போது கடல் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தும். மின்வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள அணை பலத்த பாதுகாப்பு வளையத்திற்திற்கு உட்பட்டது.
ஓணம், கிறிஸ்துமஸ், ஆங்கிலப்புத்தாண்டு ஆகிய பண்டிகைகளின்போது மட்டும் சுற்றுலா பயணிகள் அணையை பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். அதன்படி கிறிஸ்துமஸ் ஆங்கிலப்புத்தாண்டையொட்டி டிச. 1 முதல் ஜன. 31 வரை அணையை பார்க்க காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை அனுமதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் இடுக்கி மாவட்டம் உருவாகி 50ம் ஆண்டை முன்னிட்டும் கோடை சுற்றுலா சீசனை கருதியும்
இடுக்கி அணையை பார்க்க சுற்றுலா பயணிகளுக்கு மே 31 வரை அனுமதி நீடிக்கப்பட்டுள்ளதாக நீர்வளத்துறை அமைச்சர் ரோஷிஅகஸ்டின் தெரிவித்தார்.
இதற்காக பெரியவர்களுக்கு ரூ.40 சிறுவர்களுக்கு ரூ.20 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. ஆனால் வாராந்திர பராமரிப்பு பணிகளுக்காக புதன் கிழமை தோறும் பயணிகளுக்கு அனுமதி இல்லை.