சேலம்"சேலம் மாநகராட்சி, 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலர், அவரது கணவர் உள்ளிட்ட குடும்பத்தினர் மீது, போலீசார் திருட்டு வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
சேலம், குகை, ஆண்டிப்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு அருகே, மாநகராட்சி சார்பில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்துக்கான கட்டுமான பணி நடக்கிறது.
அதற்காக கொட்டப்பட்டிருந்த ஜல்லிக் கற்கள், மணலை, அந்த வார்டின் தி.மு.க., பிரதிநிதி சுதந்திரம், 40, அவரது மனைவியான, மாநகராட்சி, 47வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் புனிதா, 38, சுதந்திரத்தின் தந்தை துரை, 58, சுதந்திரத்தின் தங்கை தாமரைச்செல்வி, 38, ஆகியோர், சொந்த பயன்பாட்டுக்கு, ஜன., 31ல் எடுத்துச் செல்ல முயன்றனர்.
அதை, அதே பகுதியைச் சேர்ந்த நவமணி தலைமையில், 15 பேர் தடுத்தனர். இதில், இருதரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது.
இதையடுத்து, போட்டியாக, நவமணி தலைமையிலான கும்பலும், ஜல்லிக் கற்கள், மணலை எடுத்துச் செல்லத் தொடங்கியது.
கவுன்சிலர் புனிதா, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தார். போலீசார், கோவிந்தன், பிரதாபன், ராஜா, வெண்மதி உட்பட, 15 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த தகவல் பரவிய நிலையில், நவமணி தலைமையில், 50க்கும் மேற்பட்டோர் நேற்று முன்தினம் இரவு, செவ்வாய்ப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர்.
அவர்களை போலீசார் சமாதானப்படுத்தினர்.
தொடர்ந்து நவமணி அளித்த புகார்படி, சுதந்திரம், புனிதா, துரை, தாமரைச்செல்வி மீது, அரசு சொத்தை அபகரிக்க முயற்சித்தல், கொலை மிரட்டல், திருடுதல் பிரிவுகளில் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.